மோடியின் சொந்த மாநிலத்திலேயே வலுக்கும் எதிர்ப்பு - GSTக்கு எதிராக 8-வது நாளாக போராட்டம்!!

First Published Jul 9, 2017, 1:58 PM IST
Highlights
protest against GST in surat


ஜவுளிகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குஜராத் மாநிலம், சூரத்தில் தொடர்ந்து 8-வது நாளாக ஜவுளி வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், 165-க்கும் மேற்பட்ட ஜவுளிச்சந்தைகள், 7 ஆயிரத்துக்கும்மேற்பட்ட கடைகள் தொடர்ந்து 8-வது நாடளாக பூட்டிக்கிடக்கின்றன. இதனால், நாள் ஒன்றுக்கு ரூ.300 கோடி வருவாய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

ஜூலை 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ளது. அதில் இதற்கு முன் வரிவிதிப்பில் இல்லாத பல பொருட்களக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பல மாநிலங்களில், பல்வேறு துறையினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் ஜவுளிகள், செயற்கை நூல்கள் ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜவுளி நகரம் என்று அழைக்கப்படும் சூரத் நகரில் 5சதவீத ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக கடந்த 1-ந்தேதி யில் இருந்து கடையடைப்பு போராட்டம், தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந் திங்கள்கிழமை வியாபாரிகள் சென்ற பேரணியில் திடீரென கலவரம் ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்நிலையில், சூரத் நகரில் நேற்று மிகவும் அமைதியான முறையில் ஜவுளி வியாபாரிகள் போராட்டம் நடத்தி, பேரணியாகச்சென்று, கலெக்டரிடம் மனு அளித்தனர். ஏறக்குளைய 3கிலோமீட்டருக்கும் அதிகமாக தொலைவுக்கு பேரணியாக வியாபாரிகள் சென்றனர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான சிறு, குறு வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே நேற்றுமுன்தினம், மத்திய சாலைப்போக்குவரத்து இணைஅமைச்சர் மணிஷ் மாண்டவியாவை வியாபாரிகள் நேரில் சந்தித்து, 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை மத்தியஅரசுதிரும்பப்பெறவேண்டும் என வலியுறுத்தினர். அப்போது அவர் பேரணியை கைவிடக்கோரி வர்தத்கர்களிடம் கோரியுள்ளார். ஆனால், அதற்கு வியாபாரிகள் தரப்பில், தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போரட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

சூரத் நகரின் ரிங் ரோட்டில் தொடங்கிய பேரணி 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலெக்டர் அலுவலகம் வரை சென்று மீண்டும் அமைதியான முறையில் திரும்பியது. மிகவும் அமைதியாகவும், எந்தவிதமான அசம்பாவிதசம்பவங்களும் இல்லாமல் பேரணிநடந்தது.

சூரத் ஜவுளி வியாபாரிகள் அமைப்பின் இளைஞர் அணி செயலாளர் கவுரவ் பேசுகையில், “ ஜவுளி வர்த்தகர்களின் ஒற்றுமையை மத்தியஅரசு கவனித்து இருக்கும். ஆயிரக்கணக்காண மக்கள் பேரணியில் பங்கேற்று எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். எங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி தேவையில்லை.

இந்த போராட்டம் நடத்துவதற்காக நாங்கள் பல நாட்கள் கடினமாக உழைத்துள்ளோம். வாட்ஸ்அப், சமூக ஊடகங்கள், பிரசாரங்கள், சுவரொட்டிகள் மூலம் வியாபாரிகளையும், தொழிலாளர்களையும் திரட்டி பேரணியில் கலந்த கொள்ள வைத்துள்ளோம். மாநிலத்தில் உள்ள 165-க்கும் மேலான ஜவுளி சந்தைகளி்ன் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்” என்றார்.

click me!