
புதுவை நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11,183 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். நாராயணசாமி 18,709 வாக்குகளையும், ஓம்சக்தி சேகர் 7,526 வாக்குகளையும் பெற்றனர்.
புதுவையில் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தலில் போட்டியிடாத காரணத்தால் அவர் முதல்வர் பதவியேற்ற 6 மாதத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. நாராயணசாமி தேர்தலில் போட்டியிட வசதியாக நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதிக்கு கடந்த 19–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி, அ.தி.மு.க. சார்பில் ஓம் சக்தி சேகர் உட்பட 8 பேர் போட்டியிட்டனர். இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 85.76 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு முத்தியால்பேட்டை பாரதிதாசன் கல்லூரியில் உள்ள தனி அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்துள்ள பாதுகாப்பு அறை இன்று 8 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கிருந்து எடுத்துக்கொண்டு வாக்குகள் எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக அந்த அறையில் 9 மேஜைகள் போடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு மேஜையிலும் 3 புதுச்சேரி மாநில தேர்தல் துறையால் 2 பேரும், இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒருவரும் என மொத்தம் 3 பேர் பணியில் இருந்தனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதைதொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜான்குமார் பெற்ற வாக்குகளை விட, நான் அதிகமாக பெற்றுள்ளேன். மக்கள் எனக்கு அளித்த பரிசு இது. மக்களுக்காக சேவை செய்ய என்னை தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார்.