
கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் மருத்துவகல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார், இவரின் சகோதரரை விமானியாக(பைலட்) உருவாக்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அனைத்து உதவிகளையும் செய்தது தற்போது வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியும், அவரின் தங்கை பிரியங்கா காந்திக்கும் நிர்பயாவின் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.
நிர்பயா கொலை
டெல்லியில் பிசியோதெரபி கல்லூரியில் படித்து வந்த நிர்பயா என்ற மாணவி, கடந்த 2012ம் ஆண்டு , டிசம்பர் 16-ந்தேதி 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, போராட்டங்களும் வெடித்தன.
தூக்குதண்டனை
இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யட்ட 6 பேரில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். மீதமுள்ள 5 பேரில் 4 பேர் மீது பலாத்காரம், கொலை ஆகியபிரிவின் கீழ் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இவர்களுக்கு மரண தண்டனை பெற்றுக்கொடுக்க நிர்பயாவின் தாய் ஆஷா தேவி தீவிரமாகப் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் உதவி
பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிர்பயாவுக்கு ஒரு சகோதரனும், சகோதரியும் இருந்தனர். இதில் நிர்பயாவின் சகோதரரை விமானியாக்க தேவையான அனைத்து உதவிகளையும் ராகுல் காந்திசெய்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறியதாவது-
மனவேதனை
எனது மகள் நிர்பயா கொல்லப்பட்டபின், எனது மகன் அமன்(பெயர்மாற்றப்பட்டுள்ளது) மிகவும் மனவேதனையில் இருந்தான். அப்போது 12-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோதிலும் அவன் மனம் தளராமல் படிப்பைத் தொடர்ந்தான்.
உதவிகள்
என்னுடைய கணவர் டெல்லி விமானநிலையத்தில் கிளார்காக பணியாற்றி வருகிறார். எங்களின் குடும்ப சூழலை அறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, எனது மகனை அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் தெரிவித்து அவனை ஊக்கப்படுத்தினார். அவனின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்.
விமானி
வாழ்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று எனது மகனை உற்சாகப்படுத்தி, அவனுக்கும், குடும்பத்துக்கும் உதவிகள் செய்தார். அவன் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்தான். ஆனால், ராகுல் காந்தி அவனை விமானப்பயிற்சி எடுத்து விமானியாக ஊக்கப்படுத்தினார். பள்ளிப்படிப்பு முடிந்தபின் அவனை விமானப்பயிற்சிக்கு அனுப்பினார்.
பயிற்சி
12-ம் வகுப்பு முடித்தபின், 2013-ல் ரேபரேலியில் உள்ள இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரன் அகாடெமியில் சேர்ந்து எனது மகனை படிக்க வைக்க ராகுல் உதவினார். அதன்பின் நாங்கள் ரேபரேலிக்கு குடிபெயர்ந்தோம். அங்கு படித்துக்கொண்டே, ராணுவத்தில் சேர எனது மகன் பயிற்சி எடுத்தான். ஆனால், இரு படிப்புகளையும் ஒன்றாகச் சேர்ந்து படிக்க முடியவில்லை.
ஊக்கம்
இப்போது எனது 18 மாத விமானப் பயிற்சி படிப்பை முடித்து விமானியாகும் இறுதிக்கட்டத்தில் இருக்கிறான். அமன்படித்துக்கொண்டு இருக்கும்போதே, ராகுல் காந்தி அவனுக்கு போன் செய்து, ஒருபோதும் மனதை தளரவிடக்கூடாது என்று பேசி ஊக்கப்படுத்தினார்.
அவன் படிப்பு முடித்தபின், பயிற்சியோடு, வேலையும் சேர்ந்து பார்க்க ஏற்பாடு செய்ய உறுதியளித்துள்ளார். இப்போது பைலட்பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறான். விரைவில் விமானத்தை தனியாக ஓட்டி பறக்கப்போகிறான்.
பிரியங்கா ஆறுதல்
ராகுல்காந்தி மட்டுமல்லாது, அவரின் தங்கை பிரியங்கா காந்தியும் அடிக்கடி எனது மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உடல்நலம் விசாரிப்பார். எனது மகன் விமானியானதற்கு ராகுல் காந்திக்கு தான் நன்றி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.