
விபத்துக்கான இழப்பீடு வழங்கும் விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது. எதிர்கால விஷயங்களை கவனத்தில் கொண்டு 50 சதவீதம் வரை உயர்த்திக்கொடுக்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
எதிர்காலத்தில்...
மோட்டார் வாகன விபத்துக்கான இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் தற்போது வழங்கப்படும் இழப்பீடுத் தொகைகள், பலியானவரின் மாதச் சம்பளம், அவரது குடும்பத்துக்கான செலவு, உயிரிழந்தவரின் வயது, மற்றும் அவர் இறந்த போது இருந்த மேலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டு இழப்பீடுத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ள உச்ச நீதிமன்றம், விபத்தில் உயிரிழக்கும் நபரின் வருவாய், எதிர்காலத்தில் உயரும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
50 சதவீதம் வரை உயர்வு
அதாவது, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பலியானவரின் வயதோடு ஒப்பிட்டு, வருவாய் தொகையை கணக்கிட்டு அதை 30% முதல் 50% வரை உயர்த்தி இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்திருக்கும் உத்தரவில், வாகன விபத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை என்பது ஓரளவுக்கு இழப்பை சரிகட்டும் தொகையாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நியாயமான தொகையாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
வயது வாரியாக...
அதாவது, விபத்தில் உயிரிழந்த நபர் 40 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், அவரது வருவாயை கணக்கிட்டு அதனுடன், வருங்காலத்தில் அவரது ஊதியம் உயரும் என்பதை கவனத்தில் கொண்டு 50% அளவுத் தொகையை உயர்த்தி வழங்கவும், 40 முதல் 50 வயதுக்குட்பட்டவராக இருந்தால் அவரது வருவாயை கணக்கிட்டு, அந்த தொகையுடன் 30%த் தொகையை உயர்த்தி வழங்கவும், 50 முதல் 60 வயதுடையவர்களுக்கு கூடுதலாக 15% தொகையை உயர்த்தி வழங்கவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் இறுதிச்சடங்குக்காக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளும் வழங்கப்பட்டு உள்ளன.
வரவேற்பு
முன்னதாக வாகன விபத்துக்கு இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடித்து இழப்பீட்டை நிர்ணயிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கீழமை நீதிமன்றங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல் வரவேற்பைப் பெறுகிறது.