
மகாராஷ்டி மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசிய தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால், இது குறித்து பாஜகவின் கூட்டணி கட்சிகள் எதுவும் கருத்து தெரவிக்காமல் இருந்தன.
இந்த நிலையில், சிவசேன கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இதேபோல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பிரதமர் வேட்பாளருக்கு மாற்றாக பிரணாப்பை நிறுத்தும் முயற்சியிலும் ஈடுபடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா, தனது டுவிட்டர் பக்கத்தில், நாட்டின் ஜனாதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு எனது தந்தை மீண்டும் தீவிர அரசியலுக்கு வரமாட்டார் என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும், அவரது மகள் சர்மிஷ்தாவும் கூறியிருந்தனர்.
ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரணாப், இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும். மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.