
மின்னல் தாக்கியதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த தேபாப்ரதா பால் என்ற 21 வயது இளம் கிரிக்கெட் வீரர், ஒரு ஆல்ரவுண்டர். தனது திறமையை மேலும் வளர்த்து கொள்வதற்காக தெற்கு கொல்கத்தாவில் உள்ள கிரிக்கெட் அகாடமி ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றுவந்தார்.
வழக்கம்போல நேற்றும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென இடியும் மின்னலும் வந்துள்ளது. அதில் மின்னல் தாக்கியதில் மைதானத்திலேயே பால் மயக்கமடைந்தார். இதையடுத்து மைதானத்தில் இருந்த மற்றவர்கள், அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவலை அந்த கிரிக்கெட் அகாடமியின் செயலாளர் அப்துல் மசூத் தெரிவித்துள்ளார். மின்னல் தாக்கியதில் இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.