
போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சம்பத் நெஹ்ரா, பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான், ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை மான்களை வேட்டையாடிய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் இப்போது ஜாமினியில் வெளியே வந்துள்ளார்.
மான் வேட்டையாடியது குறித்து பிஷ்னாய் என்னும் இன மக்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர். அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள், நடிகர் சல்மான்கான் தங்களுக்கு விரோதி என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் சல்மான் கானை கொல்வோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதே இனத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சம்பத் நெஹ்ராவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ரவுடியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சல்மான் கானை கொல்ல திட்டமிட்டதாக ரவுடி நெஹ்ரா கூறியுள்ளான். பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னாய் கூட்டத்தைச் சேர்ந்த நெஹ்ரா, 10-க்கும் மேற்பட்ட கொலை, கார் கடத்தல், திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நெஹ்ராவிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது, எங்கள் கூட்டத்தின் கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சல்மான்கானும் ஒருவர். அவரைக் கொல்லும் பணி எனக்குத் தரப்பட்டது என்று கூறியுள்ளார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி சதீஷ் பாலன், சல்மான் கானைக் கொல்லும் பணியை ரவுடி பிஷ்னாய், சம்பத்திடம் ஒப்படைத்திருக்கிறார். அவர்கள் கூட்டத்தில் இவர் ஒருவருக்குத்தான் இந்தப் பணி தரப்பட்டுள்ளது. இதற்காக மும்பை சென்று சல்மான் கான் தங்கி இருக்கும் வீட்டை நோட்டமிட்டு, புகைப்படங்களும் அவர் எடுத்துள்ளார். சல்மான் கானின் நகர்வுகளைத் தொடர்ந்து 2 நாள் கண்காணித்து பின் திரும்பியுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது பிஷ்னாய் உடன் சிறையில் இருந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிஷ்னாய் சிறையில் இருந்து கொண்டே பெரிய நெட்வொர்க்கை இயக்கி வந்துள்ளார் என்றார். கைது செய்யப்பட்ட நெஹ்ரா, விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.