
எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த அரசின் முயற்சி தொடர்பாக தனக்கு தனிப்பட்ட ஆதாயம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிராகரித்துள்ளார். "மாதம் ரூ.200 கோடி மதிப்புள்ள மூளை எனக்கு உள்ளது. நான் நேர்மையாகச் சம்பாதிப்பவன்" என்று அவர் கூறினார்.
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்கரி, தனக்கு பணத்திற்கு எந்தக் குறையும் இல்லை என்று தெரிவித்தார். "எனது மூளையின் மதிப்பு மாதம் ரூ.200 கோடி. எப்படி நேர்மையாகச் சம்பாதிப்பது என்பது எனக்குத் தெரியும்" என்று அவர் குறிப்பிட்டார்.
எத்தனாலை ஒரு தூய்மையான மற்றும் மலிவான மாற்று எரிபொருளாக அரசாங்கம் ஊக்குவித்து வரும் நிலையில், இது உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, வாகனப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் தேர்வு போன்றவற்றில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், இரண்டு பெரிய எத்தனால் நிறுவனங்கள் கட்கரியின் மகன்களால் நடத்தப்படுகின்றன என்றும் விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த சர்ச்சையை நேரடியாகக் குறிப்பிடாமல், தனது மகன்களுக்கு தான் எப்படி சட்டபூர்வமான வணிக முயற்சிகளில் வழிகாட்டுகிறேன் என்பதை கட்கரி விளக்கினார். "எனது மகன்களுக்கு நான் யோசனைகளை வழங்குகிறேன், ஆனால் நான் மோசடியில் ஈடுபடுவதில்லை," என்று அவர் கூறினார்.
"சமீபத்தில், எனது மகன் ஈரானில் இருந்து 800 கண்டெய்னர் ஆப்பிள்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் இருந்து 1,000 கண்டெய்னர் வாழைப்பழங்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்தான். ஈரானுடன் பணப் பரிவர்த்தனைகள் எதுவும் இல்லை. எனது மகன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளான். எனக்கும் சொந்தமாக சர்க்கரை ஆலை, சாராய ஆலை மற்றும் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. தனிப்பட்ட ஆதாயத்திற்காக நான் விவசாயத்தில் பரிசோதனை செய்வதில்லை," என்று அவர் தெரிவித்தார்.
தொழில்முனைவோர் ஊக்குவிப்பு
உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் தனது முயற்சிகளையும் கட்கரி சுட்டிக்காட்டினார். நாக்பூர் முழுவதும் பழ வணிக வளாகங்களை அமைக்க காய்கறி வியாபாரிகளுக்கு தான் ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற முன்முயற்சிகள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் என்று அவர் கூறினார்.
"நான் இதையெல்லாம் என் சொந்த வருமானத்திற்காகச் செய்யவில்லை, இல்லையெனில் நீங்கள் வேறு ஏதாவது நினைக்கலாம். எனது வருமானம் போதுமானது. எனது மூளையின் மதிப்பு மாதம் ரூ.200 கோடி. எனக்கு பணப் பற்றாக்குறை இல்லை" என்று கட்கரி மீண்டும் வலியுறுத்தினார். தனது வணிக ஆலோசனைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சியால் தூண்டப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே, E20 பெட்ரோல் குறித்த விமர்சனங்கள், பணம் பெற்றுக்கொண்டு கூறப்படுவதை என்றும் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட சமூக ஊடக பிரச்சாரம் என்றும் நிதின் கட்கரி சாடியிருந்தார். E20 எரிபொருள் பாதுகாப்பானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
E20 பெட்ரோல் இறக்குமதிக்கு ஒரு மாற்று என்றும் அதனால் செலவு குறைகிறது என்றும் மத்திய அரசு கூறுகிறது. E20 பெட்ரோல் மாசுபாட்டைக் குறைக்கிறது எனவும் கூறப்படுகிறது. மேலும் சோளம் மற்றும் கரும்பு போன்றவற்றைப் பயிருட்டுள்ள விவசாயிகளுக்குப் பயனளிக்கிறது என்றும் மத்திய அரசு கூறி வருகிறது.