
பீகாரில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. மாநிலத்தின் 243 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்த ஆண்டின் இறுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையம் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22, 2025 அன்று முடிவடைவதால் அதற்கு முன்பே வாக்குப்பதிவு முடிக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA), இந்தியா கூட்டணியும் (INDIA bloc) தங்களது தொகுதி பங்கீட்டுக்கான உத்திகளை வேகமாகத் திட்டமிட்டு வருகின்றன.
பாஜக–ஜேடியூ இடையே ஏற்கனவே 102-103 தொகுதிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கூட்டணி ஒற்றுமையுடன் தேர்தல் களத்தில் நிற்கிறது என்ற செய்தியை மக்களிடம் சேர்க்க முயல்கிறது. மேலும், சிறிய கட்சிகளுக்கும் உரிய இடம் வழங்கும் திட்டத்தில் NDA தீவிரம் காட்டுகிறது.
சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) சுமார் 20–22 இடங்களைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் கட்சிக்கு தலா 7–9 தொகுதிகள் ஒதுக்கப்படலாம். இதன்மூலம் சிறிய கட்சிகள் புறக்கணிக்கப்படவில்லை என்ற உறுதியை NDA காட்ட முயல்கிறது.
கூட்டணிக்குள் ஒற்றுமை நிலவுவதாக NDA தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த உத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பீகார் பயணம் முக்கியமாகக் கருதப்படுகிறது. அவரின் முன்னிலையில் இறுதி தொகுதி பங்கீடு முடிவெடுக்கப்படும். இதனால் தொண்டர்களில் உற்சாகமும், எதிர்க்கட்சிகளில் அழுத்தமும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், இந்தியா கூட்டணியும் தனது வாக்கு வங்கியை காக்க துடிக்கிறது. ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை இன்று இறுதி செய்யவில்லை. தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி ஆகியோர் பயணங்கள் மூலம் மக்களுடன் தொடர்பு அதிகரித்தாலும், காங்கிரஸ்-ஆர்ஜேடி இடையேயான ஒருங்கிணைப்பு குறைவு சவாலாக உள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள் மாநிலத்தையே மட்டுமல்ல, 2029 மக்களவைத் தேர்தலுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். NDA-வின் சமநிலை பங்கீடு, சிறிய கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு, அமித் ஷாவின் பீகார் உத்திகள் ஆகியவை எவ்வாறு செயல்படுகின்றன. முக்கிய சோதனையாக இருக்கும். அதேசமயம், இந்தியா கூட்டணியும் தனது வலிமையை நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளது.