ஐக்கிய அரபு அமீரக நெடுஞ்சாலையில் இரு லாரிகள் மோதி கொண்ட விபத்தில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய இந்திய ஓட்டுனரை புர்க்காவால் தீயை அணைத்து அரபு நாட்டு பெண் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் கடைக்கோடியில் உள்ள நகரமான ரஸ் அல்-கைமாஹ் பகுதியை சேர்ந்தவர் ஜவஹர் சைப் அல் குமைட்டி. 22 வயதான இந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது, நெடுஞ்சாலை வழியாக வந்தபோது இரு லாரிகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரிகள் தீபிடித்து எரிந்தது. உடனே லாரியின் அருகில் இருந்து உடலில் தீப்பற்றியவாறு இந்திய டிரைவர் ஒருவர் ஓடி வந்தார். இதைபார்த்த அந்த பெண் உடனடியாக தனது காருக்கு ஓடிய ஜவஹர் உள்ளே இருந்த பெண்மணியிடம் புர்க்காவை வாங்கி கொண்டு போய் உடலில் தீப்பற்றியவாறு கீழே புரண்டு கதறிய டிரைவரின் மீது புர்க்காவால் அடித்து தீயை அணைத்து காப்பாற்றினார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு குழுவினர் டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மற்றொரு லாரியின் டிரைவரும் தீக்காயங்களுடன் கொண்டு செல்லப்பட்டார்.