Mumbai : மத்திய மும்பையில் உள்ள குர்லா என்ற பகுதியில் ஒரு சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவித்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை காவல்துறையின் கூற்றுப்படி, நேற்று ஞாயிற்று கிழமை மதியம் 12.30 மணியளவில் ஒரு சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று சந்தேகத்திற்கு இடமான முறையில் கிடப்பதாக காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த சூட்கேசை கைப்பற்றி அதன் உள்ளே ஒரு பெண்ணின் உடல் இருப்பதை கண்டனர்.
"மும்பை நகரில் மெட்ரோ திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் சாந்தி நகரில் உள்ள சிஎஸ்டி சாலையில் தான் அந்த சூட்கேஸ் கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.
இறந்த பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார், உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த அந்த பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
"அந்த பெண் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், அவரது உடலைப் பார்க்கும்போது, அவரது வயது 25 முதல் 35குள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அந்த பெண் டி-சர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்திருந்தார்," என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.