தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மதிகா சமூகத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன.
அம்மாநிலத்தில், பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், தலித் அமைப்பான மதிகா இட ஒதுக்கீடு போராட்ட சமிதி (MRPS) பாஜகவுக்கு முழு ஆதரவை அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி செகந்திரபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் இந்த அமைப்பின் நிறுவனர் மந்த கிருஷ்ண மதிகா பிரதமர் மோடியுடன் இணைந்து மேடையை அலங்கரித்தார். அந்த மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அவருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறிய புகைப்படங்கல் வெளியாகின.
மேலும், அந்த பொதுக்கூட்டத்திலேயே மதிகா சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையாக உள் இடஒதுக்கீடு மதிகா சமூகத்தை பட்டியலின வகுப்பினருக்குள் உட்பிரிவு செய்வது குறித்து பரிசீலிக்க பாஜக அரசு, குழு அமைக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல், தங்கள் சமூகத்தை ஆளும் பிஆர்எஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக மந்த கிருஷ்ண மதிகா குற்றம் சாட்டினார்.
அப்போதே, மதிகா இட ஒதுக்கீடு போராட்ட சமிதி பாஜகவுக்கு ஆதரவளிக்கக் கூடும் என ஊகங்கள் பரவின. இதனிடையே, மாநில தேர்தல் குறித்து இந்த அமைப்பினரை சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பின்னணியில், தெலங்கானா தேர்தலில் பாஜகவுக்கு முழு ஆதரவை அளிப்பதாக மதிகா இட ஒதுக்கீடு போராட்ட சமிதி (MRPS) அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் சுமார் 17.53 சதவீதம் (இதிலிருந்து அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது) எஸ்.சி. சமூக மக்கள்தொகை உள்ள நிலையில், அதில், 60 சதவீதத்தம் மதிகா சமூக மக்கள் உள்ளனர்.
ஆன்லைன் லோன் செயலியில் கடன்: உஷார் மக்களே...!
தெலங்கானாவில் 33 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக எஸ்.சி. சமூகத்தினரின் மக்கள் தொகை உள்ளது. மேலும், 20 - 25 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி வேட்பாளர்களை தீர்மானிக்கும் நிலையில், மதிகா சமூகத்தினர் உள்ளனர். அத்தொகுதிகளில் அச்சமூக மக்கள்தான் தனித்த பெரிய சமூகத்தினராக உள்ளனர். மேலும், 4 முதல் 5 தொகுதிகளில் இரண்டாவது பெரிய சமூகமாக மதிகா சமூகத்தினர் உள்ளனர்.
இந்த சூழலில் தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மதிகா சமூகத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளது, அக்கட்சிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.