
மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் குற்றவாளியான முஸ்தபா தோசா, நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.
தடா நீதிமன்றம் தீர்ப்பு
மும்பையில் கடந்த 1993 மார்ச் 12-ல் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. மொத்தம் 12 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 257 பேர் உயிரிழந்தனர். அப்போதைய மதிப்பில் ரூ. 27 கோடி அளவிலான சொத்துகள் சேதம் அடைந்தன. வழக்கில் யாகூப் மேமன், இந்தி நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்ட 100 பேருக்கு கடந்த 2007-ல் தண்டனை விதிக்கப்பட்டது. குறிப்பாக யாகூப் மேமமன் தூக்கிலிடப்பட்டார். சஞ்சய் தத் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மும்பை குண்டுவெடிப்பு தொடர்பான 2-வது வழக்கில் தாதா அபு சலீம், முஸ்தபா தோசா உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகள் என்று மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கிகள், வெடி மருந்து பொருட்கள் மற்றும் நாச வேலைக்கு தேவையானவற்றை இந்தியாவுக்குள் கடத்தி வந்ததாக தோசாவின் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
காய்ச்சல், ரத்த அழுத்தம்
இந்த நிலையில் கடும் காய்ச்சல் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக முஸ்தபா தோசா நேற்று காலை ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, அதிகாலை 3 மணிக்கு முஸ்தபா தோசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தோசாவுக்கு ஏற்கனவே அதிக காய்ச்சல் இருந்துள்ளது.
இதய அறுவை சிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாரடைப்பு அதிகமாக இருந்ததால் அவரது உயிர் பிரிந்தது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் தோசாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.
வழக்கறிஞர் வாதம்
இதற்கிடையே கடந்த செவ்வாயன்று, மும்பை நீதிமன்றத்தில் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு தடா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபக் சால்வி வாதிடும்போது, தொடர் குண்டுவெடிப்பில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமனை காட்டிலும், பயங்கர குற்றங்களை முஸ்தபா தோசா செய்துள்ளார். தொடர் குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக தோசா செயல்பட்டார்.
தனது அடியாட்களுக்கு இந்தியாவில் நாசவேலையை செய்யுமாறு அவர் உத்தரவிட்டிருந்தார். எனவே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று வாதிட்டடார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக தோசாவின் நேற்று மரணம் அடைந்தார்.