
2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் 17வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய பாதுகாப்புப் படை (NSG) சார்பில் நாளை (புதன்கிழமை) கேட்வே ஆஃப் இந்தியாவில் (Gateway of India) ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதிமொழி எடுப்பதன் மூலம், இத்தகைய தாக்குதல்களைத் தடுப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நினைவஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு ‘இனி ஒருபோதும் இல்லை’ (Neverever) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது.
பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் அடங்கிய ஒரு பிரத்தியேக நினைவு மண்டபம் (Memorial Zone) அமைக்கப்படவுள்ளது. அங்கு மலர் அஞ்சலியும் மெழுகுவர்த்திகளும் ஏற்றப்படும்.
தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை கௌரவிக்கும் விதமாகவும், இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்ற கூட்டு உறுதியை மறுவுறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
அஞ்சலிக்காக ஏற்றப்படும் மெழுகுவர்த்திகளின் மெழுகைக் கொண்டு, எதிர்கால நினைவு அனுசரிப்புகளுக்காகப் பாதுகாக்கப்படும் வகையில் ஒரு "வாழும் நினைவுச் சின்னம் (Living Memorial)" உருவாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில், மும்பை நகரில் உள்ள 11 கல்லூரிகள் மற்றும் 26 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
கேட்வே ஆஃப் இந்தியா வளாகத்தில், பொதுமக்கள் உறுதிமொழி எடுக்கவும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலில் பாதிகப்பட்டவர்களுக்கும் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதில், பிரத்யேக ஆடியோ-விஷுவல் காட்சிகளும் இடம்பெறும்.
அன்றைய மாலைப் பொழுதில், கேட்வே ஆஃப் இந்தியா கட்டிடம் மூவர்ணக் கொடியின் வண்ணங்களில் ஒளிரச் செய்யப்படும்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் 2008, நவம்பர் 26 அன்று மும்பையின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் நடத்திய தாக்குதல்களில், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.