
முலாயம் சிங் குடும்பத்தில் பிரச்சனை இருப்பதுபோல் அவரும், மகன் அகிலேஷ் யாதவும் கடந்த சில மாதங்களாக நாடகமாடி வருவதாக மாயாவதி கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் வெற்றி பெறும் முனைப்பில் சமாஜ்வாடி, பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் இடையே போட்டிநிலவுகிறது. சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவுக்கும், முலாயம் சிங்கின் சகோதரர் சிவபால் யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
சிவபால் யாதவின் ஆதரவாளர்களை, முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஓரம் கட்டப்பட்டதை அடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு மேலும் அதிகரித்தது. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தார். ஆனாலும், சிவபால், அகிலேஷ் இடையே மோதல் இருந்து வருகிறது.
சமாஜ்வாடியின் மாநில தலைவராக சிவ்பால் மீண்டும் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் கூட்டிய கூட்டத்தை அகிலேஷ் புறக்கணித்தார். முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் தன்னை அறிவிக்க வேண்டும் என அகிலேஷ் வலியுறுத்தினார்.
இதற்கு அவரது தந்தை முலாயம் சிங் மறுத்துவிட்டார். தேர்தலுக்குபின் இதுகுறித்து முடிவு செய்யப்படுமென தெரிவித்தார். இது அகிலேஷுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அரசியல் ஆதாயத்துக்காக முலாயம் சிங்கின் குடும்பத்தினர் நாடகமாடுவதாக மாயாவதி விமர்சித்துள்ளார். குடும்பத்துக்குள் பிரச்சனை இருப்பதுபோல் முலாயம் சிங்கும், அகிலேஷும் கடந்த சில மாதங்களாக நாடகமாடி வருகின்றனர். மக்களை பற்றி சிந்திக்காமல் தினமும் புதுப்புது நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். வரும் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார்.