
அதிரடி ஆட்டத்திற்கும் நெருக்கடி மிக்க இறுதி நேரத்தில் கூட வெற்றிக்கு அழைத்துச் செல்லவதற்கும் பெயர் போனவர் மகேந்திரசிங் தோனி. சமீபகாலமாக இந்திய அணியில் அவர் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது என்றும் அவருக்கு பதிலாக தகுதி வாய்ந்த இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் குரல்கள் மெல்ல கேட்கத் தொடங்கின. ஆனால் ஐபிஎல் போட்டியும் சென்னை அணியும் பழைய நிதானமான தோனியின் அதிரடி ஆட்டத்தை மீட்டெடுத்துள்ளன.
ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும் டில்லி அணியும் நேற்று பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் பந்து வீச்சைத் தேர்வுசெய்தார். சென்னை அணியின் ஷேன் வாட்சன், டு பிளஸிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள். வாட்சன் அதிரடியில் இறங்க டூ பிளஸிஸ் நிதானமாக ஆடினார், ஆனால் தோதான பந்துகளை சிக்சராக மாற்றுவதற்கும் அவர் தவறவில்லை.
முதல் நான்கு ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 25 ரன்கள் எடுத்திருந்தது. 5ஆவது ஓவரில், வாட்சன் இரண்டு சிக்சரும், டு பிளஸிஸ் ஒரு சிக்சரும் விளாசினர். 6ஆவது ஓவரை அவேஷ் கான் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தை வாட்சன் சிக்சருக்குத் தூக்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது.
9ஆவது ஓவரின் முதல் பந்தை சிக்சர் அடித்து 25 பந்தில் அரைசதத்தைக் கடந்தார் வாட்சன். சென்னை அணி 10.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
சென்னை அணி 10.5 ஓவரில் 102 ரன்கள் எடுத்திருக்கும்போது விஜய் சங்கர் பந்தில் டு பிளஸிஸ் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ரன் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.
3ஆவது விக்கெட்டுக்கு வாட்சன் உடன் அம்பத்தி ராயுடு ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது வாட்சன் 78 ரன்னில் மிஸ்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் இந்த ரன்னைக் குவித்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 13.5 ஓவரில் 130 ரன்கள் எடுத்திருந்தது.
4ஆவது விக்கெட்டுக்கு ராயுடுவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். 16 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 149 ரன்கள் எடுத்திருந்தது.
17ஆவது ஓவரை டிரென்ட் போல்டு வீசினார். இந்த ஓவரில் தோனி இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியும், ராயுடு ஒரு பவுண்டரியும் அடிக்க சென்னை அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது. 18ஆவது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரில் ராயுடு இரண்டு பவுண்டரியும், ஒரு சிக்சரும் விளாசினார். தல டோனி 108 மீட்டருக்கு ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு மாஸ் ஆட்டியது குறுப்பிடத்தக்கது.
19ஆவது ஓவரின் முதல் ஐந்து பந்துகளை அபாரமாக வீசிய அவேஷ் கான், கடைசி பந்தில் தோனிக்கு சிக்ஸ் ஒன்றை விட்டுக்கொடுத்தார். இதனால் 19 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்கோர் 198 ஆக உயர்ந்தது.
கடைசி ஓவரை போல்ட் வீசி முதல் இரண்டு பந்தில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். தோனி மூன்றாவது பந்தில் சிக்ஸும் நான்காவது பந்தில் பவுண்டரியும் விளாசினார். அடுத்த பந்தில் ராயுடு ரன்அவுட் ஆனார். அவர் 24 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.
கடைசி பந்தில் தோனி இரண்டு ரன்கள் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. தோனி 22 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். 51 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். டெல்லி அணி சார்பில் அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.