நாடாளுமன்ற மக்களவையில் 700க்கும் மேற்பட்ட தனிநபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது
நாடாளுமன்ற மக்களவையில் இதுவரை 700க்கும் மேற்பட்ட தனிநபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 2019ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக பாஜக அரசு அமைந்ததும் உருவான 17ஆவது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டவை. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கேள்விக்கு பணப் பட்டுவாடா தொடர்பான திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பிற விவகாரங்கள் இரு அவைகளிலும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இருப்பினும், தனிநபர் மசோதாக்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது தெரியவில்லை. தனிநபர் மசோதாக்கள் என்பது எம்.பி.க்கள் தங்கள் தனிப்பட்ட திறனின் அடிப்படையில் அறிமுகப்படுத்துவதாகும். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் அல்லது தற்போதுள்ள சட்டங்களில் மாற்ரத்தை விரும்பினால் அவர்களால் தனிநபர் மசோதாக்கள் கொண்டு வரப்படுகின்றன.
மக்களவை வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இதுபோன்ற 713 மசோதாக்கள் மக்களவையில் நிலுவையில் உள்ளன. ஒரு அமர்வின் போது தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்த, ஒரு தனிப்பட்ட உறுப்பினர் அதிகபட்சம் மூன்று அறிவிப்புகளை வழங்கலாம். அத்தகைய மசோதா, தற்போதைய சட்ட அமைப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து அரசாங்கத்தை எச்சரிக்கும் நோக்கத்துடன், அரசியலமைப்பு நடவடிக்கை தேவைப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், சில எம்.பி.க்களால் தாக்கல் செய்யப்படுகின்றன.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தவிர மற்ற கோப்புகளுக்கு ஒப்புதல்: உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தகவல்!
பொது சிவில் சட்டம், பாலின சமத்துவம், பருவநிலை மாற்றம், விவசாயம், தற்போதுள்ள குற்றவியல் மற்றும் தேர்தல் சட்டங்களில் திருத்தம் மற்றும் அரசியலமைப்பு விதிகளை திருத்துதல் மற்றும் பிற சிக்கல்கள் தொடர்பாக தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற விதிகளின்படி, உறுப்பினர்கள் இரு அவைகளிலும் தனிநபர் மசோதாக்கள் அல்லது தீர்மானங்களை அறிமுகப்படுத்தவோ அல்லது விவாதிக்கவோ அமர்வின் போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் இரண்டாம் பாதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விதிகளின்படி, ஒரு தனிநபர் மசோதா மீதான விவாதம் முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்க வேண்டும் அல்லது அதை திரும்பப் பெறுமாறு உறுப்பினரிடம் கோர வேண்டும். 14ஆவது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட 300 அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர் மசோதாக்களில், 4 சதவீதம் மட்டுமே விவாதிக்கப்பட்டது; சபையில் ஒரு விவாதம் கூட இல்லாமல் 96 சதவீதம் காலாவதியானது. இன்றுவரை, மொத்தம் 14 தனிநபர் மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.