
இன்றைய காலக்கட்டத்தில் சர்வதேச அளவில் மிகப்பெரிய சவாலாக இருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு. பல வகைகளில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க சர்வதேச அளவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2019 ஜனவரி முதல் தமிழ்நாட்டில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிளாஸ்டிக்கை ஒழிக்க குஜராத்தில் புதுவிதமான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குஜராத் மாநில வதோரா ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் விதமாக பிளாஸ்டிக் ஒழிப்பு இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளே போட்டால் அவை உடைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை போட்ட பிறகு இயந்திரத்தில் பயணிகள் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்கள் பேடீஎம் கணக்கில் 5 ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய இயந்திரத்துக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுபோன்ற முன்னெடுப்புகள் தமிழ்நாட்டிலும் மேற்கொள்ளப்பட்டால், பிளாஸ்டிக் ஒழிப்பில் அது நல்ல பலனைத்தரும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.