
1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என மத்தியஅரசு அறிவித்ததையடுத்து நாடுமுழுவதும் எழுந்தள்ள பணத்தட்டுப்பாட்டால், டெல்லிக்கு வர வேண்டிய 2 லட்சத்துக்கும் மேலான லாரிகள் நடுவழியில் நிற்கின்றன. இதனால், அடுத்த சில நாட்களில் டெல்லி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்படும் எனத் தெரிகிறது.
பிரதமர் மோடி, நாட்டில் கருப்புபணத்தையும், கள்ளநோட்டையும் ஒழிக்கும் நோக்கில், புழக்கத்தில் உள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார். இதனால், மக்கள் தங்களிடமுள்ள செல்லாத ரூபாயை மாற்ற வங்கிகளின் வாசலில் காத்திருக்கின்றனர். சில்லறை தட்டுப்பாட்டால், நாடுமுழுவதும் வர்த்தகம், சிறுவணிகம், போக்குவரத்து என அனைத்திலும் சிக்கல் ஏற்பட்டு மந்தமடைந்துள்ளது.
இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொருட்களை ஏற்றி டெல்லிக்கு வர வேண்டிய லாரிகள், டெல்லியில் இருந்து பல மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய லாரிகள் என மொத்தம் 4.50 லட்சம் லாரிகளில் பாதிக்கும் மேல் பணம் இல்லாமல் சாலையில் நின்றுள்ளன. இதனால், வர்த்தகர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய பொருட்கள் கடந்த 5 நாட்களாக வந்து சேரவில்லை.
இது குறித்து அனைத்து இந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு(ஏ.ஐ.எம்.டி.சி.) தலைவர் பிம் வாத்வா விடுத்த கூறுகையில், “ லாரி போக்குவரத்தில் 80 சதவீதம் ரொக்கப்பணத்தில் மூலமே நடக்கிறது. தற்போது நாடுமுழுவதும் எழுந்துள்ள செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, பணத்தட்டுப்பாடு ஆகியவற்றால் டெல்லிக்கு வரவேண்டிய 2 லட்சத்துக்கும் ேமற்பட்ட லாரிகள் இன்னும் வந்து சேரவில்லை.
4 நாட்களுக்கு முன்பே இந்த லாரிகள் இங்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். பணத்தட்டுப்பாடு பிரச்சினையால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பால், காய்கறிகள், பழங்கள், மருந்துகள் வருவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
குர்கானில் இருந்து கார்களை ஏற்றிச்செல்லும் கார் கேரீரிஸ் அசோஷியேசன் தலைவர் விபுல் நந்தா கூறுகையில், “ லாரிகளுக்கு டீசல் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி நிரப்பிக்கொள்ளலாம். ஆனால், டிரைவர்களின் செலவு, மாநிலங்களுக்கு இடையிலான வரி, அனைத்துக்கும் ரொக்கப்பணம் தேவை. சில்லறைபற்றாக்குறையில் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சூழல் விரைவில் சரியாகும் என நம்புகிறோம்'' எனத் தெரிவித்தார்.
நொய்டாவில் உள்ள போக்குவரத்து நிறுவனம் ஒன்று கூறுகையில், “ 80 சதவீத லாரிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இப்போது லாரிகளை இயக்க ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. ஆனால், வங்கியில் இருந்து எடுக்கமுடியவில்லை என்பதால், லாரிகள் சரக்கு ஏற்றிச்செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
இதனால், அடுத்த சில நாட்களில் டெல்லி மக்களுக்கு வந்து சேர வேண்டிய காய்கறிகள், பால்பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.