இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான சர்ச்சை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் அல்ல, விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது எல்பரடேய் ஏசியாநெட்டிடம் கூறினார்
கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கான தொடர்புகள் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பிரச்சினை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் அல்ல; ஆனால், அது விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என ஏசியாநெட் செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், எகிப்தை சேர்ந்த முன்னாள் தூதருமான முகமது எல்பரடேய் தெரிவித்துள்ளார்.
undefined
எகிப்திய சட்ட அறிஞரும், அந்நாட்டின் முன்னாள் துணை அதிபருமான முகமது எல்பரடேய், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும், அதில் இந்தியாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஜி20 அமைப்பானது பாதுகாப்பு கவுன்சிலைப் போன்று தற்காலிகக் குழுவாக செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.
ஏசியாநெட் செய்தி நிறுவனத்துக்காக முன்னாள் தூதர் டி.பி.சீனிவாசனுக்கு அளித்த பேட்டியில், “அமைதிக்கான ஒரே வழி உலகளாவிய ஒத்துழைப்புதான். தற்போதைய உலகளாவிய சூழ்நிலை மிகவும் ஆபத்தானதாக உள்ளது. எனவே, அதில் மாற்றம் தேவை; நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்” என்று முகமது எல்பரடேய் சுட்டிக்காட்டினார்.
“போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்தான் பொறுப்பு. ரஷ்யா - உக்ரைன் போர் உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. இதற்கெல்லாம் தீர்வாக அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான கூட்டுக் கொள்கை இருக்க வேண்டும்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரில் ஐ.நா. பொறுத்தமற்றதாக மாறிப்போனதாக தெரிவித்த அவர், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனக்கு அதிகாரம் இல்லை என்று ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா வீட்டோ அதிகாரம் வைத்திருக்கும் போது, போர் எப்படி முடிவுக்கு வரும் என்று முகமது எல்பரடேய் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மாதிரியான சூழலில், உடனடியாக ஐநா பாதுகாப்புக் குழுவை மறுசீரமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக மக்கள்தொகையில் 7இல் ஒரு பங்கைக் கொண்ட இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இடம்பெறாமல் எப்படி இருக்க முடியும் என கேள்வி எழுப்பிய அவர், பாதுகாப்பு கவுன்சிலைப் போலவே ஜி-20 ஒரு தற்காலிக குழுவாக செயல்பட முடியும் என்றும், சர்வதேச ஒத்துழைப்பே அமைதிக்கான ஒரே வழி என்றும் கூறினார்.
இந்தியாவின் ஹீரோக்கள் ஒன்றிணைந்த தருணம்! காணொளி காட்சியில் நிகழ்ந்த அபூர்வமான சந்திப்பு!
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதையடுத்து எழுந்த இந்தியா-கனடா பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் முகமது எல்பரடேய் விருப்பம் தெரிவித்தார். “இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னை ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் அல்ல; வாக்குவாதம் யாருக்கும் நல்லதல்ல. பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். பயங்கரவாதத்தை கனடா இன்னும் பலமாக எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“உலகில் எங்கு சென்றாலும் கடின உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலித்தனமான இந்தியர்களை காணலாம். கனடாவின் வளர்ச்சியில் இந்தியர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் இந்தியர்கள் பல துறைகளில் முன்னணியில் உள்ளனர். இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறைகளுக்கு நிலையான உலகத்தை ஒப்படைக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.” என்றும் முகமது எல்பரடேய் தெரிவித்துள்ளார்.