
2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து மூத்த உலகப் பொருளாதார நிபுனர்கள், ஆய்வாளர்கள் உடன் பிரதமர் மோடி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்குபின், முதல்முறையாக இதுபோன்ற கூட்டத்தை பிரதமர் மோடி நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியத்துவம்
பாரதியஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிப்பொறுப்பு ஏற்று 3-வது பட்ஜெட்டை 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்கிறது. எந்த பட்ஜெட்டில் இல்லாத முக்கியத்துவத்தை பிரதமர் மோடி இதற்கு அளித்து வருகிறார்.
ரூபாய்நோட்டு தடை
நாட்டில் இருக்கும் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் கடந்த மாதம் ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர்மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து 50 நாட்கள் மக்கள் பொறுமையுடன் சிரமங்களை தாங்கினால், அடுத்து வரும் நாட்கள் ஒளிமயமாக இருக்கும் என உறுதியளித்தார்.
ஆலோசனைக் கூட்டம்
அந்த 50 நாட்கள் வரும் 30-ந்தேதியோடு முடிவதால், அடுத்தாக நாட்டின் வளர்ச்சித்திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளதாகத் தெரிகிறது.
நிதிஅயோக்
இது குறித்து மத்தியஅரசு வட்டாரங்கள் கூறுகையில், “ பிரதமர் மோடி தலைமையில் நாளை(இன்று) நடக்கும் கூட்டத்தை நிதி அயோக்அமைப்பு தான் ஒருங்கிணைக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு நாட்டின் நீண்டகால திட்டம், ஆக்கப்பூர்வ விஷயங்கள், திட்டங்கள் ஆகியவை குறித்து பிரதமர் மோடிக்கு நிதி அயோக் அமைப்பை எடுத்துக்கூற உள்ளது.
இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மூத்த பொருளாதார நிபுனர்களுடன் 2017-18ம் ஆண்டு பட்ஜெட் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசிக்க இருக்கிறார்'' எனத் தெரிவித்தனர்.
பொருளாதார நிபுனர்கள்
இந்த கூட்டத்தில் கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள கார்ல்டன் பல்கலையின் பொருளாதார பேராசிரியர் விவேக் தஹேஜியா, தேசிய பொது நிதி மற்றும் கொளை மையத்தின் இயக்குநர் ரதின் ராய், கிரெடிட் சியூசய் நிர்வாக இயக்குநர் நீல்கந்த் மிஸ்ரா, ஆக்சஸ் முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் சுர்ஜித் பல்லா, நிதி அயோக் உறுப்பினர்கள் விவேக் தேப்ராய், வி.கே சரஸ்வத், ரமேஸ் சந்த், வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகம் சார்பில் செயலாளர்கள் மட்ட அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன ஆலோசிக்கப்படும்?
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரூபாய் நோட்டு தடை குறித்து ஆலோசிக்கப்படுவது குறித்து நிகழ்ச்சிநிரல் பட்டியலில் இல்லை.அதேசமயம், ஆலோசிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ரூபாய் நோட்டுதடை அறிவிப்புக்கு பின் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், நிச்சயம் அதன் தாக்கங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த பட்ஜெட்டில் என்ன விதமான விஷயங்ள் சேர்க்கப்பட வேண்டும், எதை நோக்கி இருக்க வேண்டும் என்பது முக்கிய ஆலோசனையாக இருக்கும். ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால், இந்த காலாண்டு மட்டுமல்லாமல் அடுத்த சில காலாண்டுகளும் மந்தமாகவே இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரி குறைப்பு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பட்ஜெட்டில் வரி முறைகளை நெறிப்படுத்துதல், வரிகளைக் குறைத்தல் ஆகியவை குறித்து நிதி அயோக்ஆலோசிக்கும் என மத்தியஅரசு வட்டாரங்கள் கூறுகின்றன.