
3 நாட்கள் அரசு முறை பயணமாக ஜூலை 4ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இஸ்ரேல் செல்லும் அவரை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் சிறப்பான முறையில் வரவேற்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இஸ்ரேலின் 70 ஆண்டு வரலாற்றில் இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.
இதையொட்டி வரும் 4ம் தேதி இஸ்ரேல் வரும் பிரதமர் மோடியை பென்குரியன் விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் உள்ளிட்ட குழுவினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். அப்போது இந்தியா, இஸ்ரேல் தேசிய கீதங்கள் முழங்கப்பட்டு சிறப்பான வரவேற்பு தரப்படுகிறது.
இந்த தேசிய கீதங்களை இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேல் இசைக் கலைஞர் லியோரா இட்சாக் பாடுகிறார். இவர் மும்பையில் இசைப்பயிற்சி பெற்றவர். பல்வேறு பாலிவுட் படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு அன்று மாலை பிரதமரின் இல்லத்தில் பிரதமர் பெஞ்சமின் இரவு விருந்து வழங்குகிறார். இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் மறுநாள் சந்தித்து பேசுகின்றனர்.
இதனிடையே இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென்கொரியா, மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி -20 மாநாட்டில் கலந்து கொள்கிறார்..
ஜூலை மாதம் 7 மற்றும் 8 ம் தேதிகளில், ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரத்தில், 12வது ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி செல்ல உள்ளார். பிரதமர் மோடியுடன் நிதி ஆயோக் துணைத்தலைவர் ஷெர்பா அரவிந்த் பனகாரியா உட்பட பல்வேறு பிரதிநிதிகள் உடன் செல்கின்றனர்.