மக்களிடம் பணம் பறிப்பது தான் மோடி அரசின் நோக்கம்: ராகுல் விளாசல்!

By Manikanda Prabu  |  First Published Sep 1, 2023, 5:00 PM IST

மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி, அதை குறிப்பிட்ட சிலருக்கு மாற்றுவதுதான் மோடி அரசின் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.


எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மொத்தம் 28 கட்சிகளை சேர்ந்த 63 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு நாட்கள் கூட்டத்தின் கடைசி நாளான இன்று, இண்டியா கூட்டணி சார்பில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிப்பது, தேர்தல் பிரசாரத்தை உடனடியாக தொடங்குவது, ஒன்றுபடும் பாரதம், வெற்றிபெறும் இந்தியா  என்ற கருப்பொருளுடன் பிரசாரங்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

இதையடுத்து, இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி, அதை குறிப்பிட்ட சிலருக்கு மாற்றுவதுதான் மோடி அரசின் நோக்கம் என காட்டமாக விமர்சித்தார்.

இந்திய நிலத்தை சீனர்கள் கைப்பற்றியுள்ளனர். லடாக்கில் உள்ள ஒவ்வொருவருக்கும் இது தெரியும். இது தேசிய முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவங்களை பத்திரிகைகள் வெளியிடுவதில்லை என்றும் ராகுல் காந்தி சாடினார்.

“கூட்டத்தில் சில சக்திவாய்ந்த முடிவுகளை எடுத்துள்ளோம். தொகுதி பங்கீடு முடிவுகளை விரைவுபடுத்தியுள்ளோம். மேலும் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பாக செயல்பட ஒருங்கிணைப்பு குழு குழுவையும் அமைத்துள்ளோம்.” என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். பாஜகவை தோற்கடிக்க எங்களது இண்டியா கூட்டணி நெகிழ்ச்சியுடன் செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார். நாட்டின் முன்னேற்றத்தில் ஏழை மக்களை உள்ளடிக்கிய தெளிவான வளர்ச்சிப் பாதையை நாங்கள் முன்மொழிவோம்  என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இல்லாததால் பிரதமர் மோடி பலன் அடைந்ததாக தெரிவித்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணரவில்லை, விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “9 ஆண்டுகளில் செய்ததை பட்டியலிட முடியாமால், இந்தியா கூட்டணி கட்சிகளைப் பற்றி வசைபாடி வருகிறார் பிரதமர் மோடி. இண்டியா கூட்டணி தற்போது நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. இதுவரை காணமுடியாத சர்வாதிகார ஆட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் எதிரிகளை பழிவாங்க ED, CBI போன்றவற்றை பாஜக பயன்படுத்துகிறது. மிகப்பெரிய போர்க்களத்தில் ஈடுபடப் போகிறோம். அனைவரும் பக்க பலமாக நின்று இணைந்து துணை நிற்க வேண்டும்.” என கேட்டுக் கொண்டார்.

இண்டியா கூட்டணி: 13 கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பு!

“இன்று இந்திய இளைஞர்களுக்கு வேலை இல்லை. 'ஒரு நபருக்காக' அரசு செயல்பட்டு, ஊழலில் மூழ்கியுள்ளது. இவ்வளவு திமிர்பிடித்த அரசு மத்தியிலும் இருந்ததில்லை; அவர்களின் ஆணவம் அவர்களை வீழ்த்தும். “என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஒருபோதும் ஏழைகளின் நலனுக்காக பாடுபட மாட்டார்; மோடி அரசு நிறுவன ஊழலை ஊக்குவித்து வருகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ‘பத்திரிக்கை சுதந்திரம்’ மீட்டெடுக்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

இண்டியா கூட்டணி கட்சிகள் சர்வாதிகாரம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடும் என்று தெரிவித்த உத்தவ் தாக்கரே, ஜூடேக பாரத், ஜீதேக இந்தியா என்ற எண்ணத்தில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். அச்சுறுத்தும் சூழலை அகற்ற இண்டியா கூட்டணி கட்சிகள் செயல்படும் என்றார்.

click me!