2014-ல் சியாச்சின், 2015-ல் பஞ்சாப், இந்த முறை சீனா எல்லையில் தீபாவளிக் கொண்டாட்டம்.. கலக்குங்க, பிரதமர் மோடி!!!

First Published Oct 29, 2016, 11:51 PM IST
Highlights


உத்தரகாண்ட் மாநிலத்தில்,  இந்திய-சீன எல்லைப்பகுதியில், கண்காணிப்பில் இருக்கும் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுடன் பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுகிறார்.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும், கடந்த 2014-ம் ஆண்டு தீபாவளிப்பண்டிகையை சியாச்சின் எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார். கடந்த ஆண்டு, பாகிஸ்தான் ஓரத்தில் உள்ள பஞ்சாப் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களுடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார்.

இந்த நிலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்திய-சீன எல்லையில் கடைசியாக அமைந்த மனா கிராமப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருக்கும் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களுடன் பிரதமர் மோடி நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கிறார். பிரதமர் மோடியுடன் தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் உடன் செல்கிறார்.

இந்த பயணத்தின் போது, எல்லைப்பகுதி அருகே அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலுக்கு பிரதமர் மோடி செல்வார் எனத் தெரிகிறது.

காஷ்மீர் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 18ந் தேதி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவத்தினர் 29-ந்தேதி தாக்குதல் நடத்தினர். இதனால், இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனால், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு தெரிவித்து கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்யப்பட்டு ‘சந்தேஷ்2சோல்ஜர்ஸ்’ என ஹேஸ்டேக் வெளியிடப்பட்டது.

மேலும், நரேந்திரமோடி ஆப்ஸ், மைகவர்.இன். மற்றும் ஆல் இந்தியா ரேடியோ மூலம் பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையின்படி,  எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் வீரர்களுக்கு இதுவரை 10 லட்சம் வாழ்த்துச் செய்திகள் வந்துள்ளன. இதில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும்மைகவ் ஆகியவற்றின் மூலம் 7 லட்சம் வாழ்துக்களும், நரேந்திரமோடி ஆப்ஸ் மூலம் 3 லட்சம் வாழ்த்துச் செய்திகளும் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வி.ஐ.பி.களான பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சல்மான்கான், அமிர்கான், அக்‌ஷய் குமார், அனுபம் கேர், விராத் கோலி, விரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், சாக் ஷி மாலிக் ஆகியோரும் வாழ்துத் தெரிவித்துள்ளனர்.

click me!