
பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில் உள்ள காளியம்மன் கோயில் அருகே இரு பிரிவினர் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் திடீரென ஒருவரை ஒருவர் மிக கடுமையாக தாக்கிக் கொண்டனர். முதலில் இரு பிரிவிரன் இடையே சிறு வாக்குவாதமாக தொடங்கி அதன்பின் தாக்குதலில் முடிந்தது.
இரு பிரிவினர் இடையே மோதல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மீண்டும் அந்த பகுதியில் மோதல் ஏற்படுவதை தடுக்கும் விதமாக இன்று காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மொபைல் இண்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
ஒருவர் கைது:
"வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மொபைல் இண்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்," என பாட்டியாலா துணை கமிஷனர் தெரிவித்து இருக்கிறார்.
மோதலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சூடு காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் இதுவரை நான்கு பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தீவிரப்படுத்த வேண்டும்:
"பஞ்சாப் மாநிலத்தில் இது போன்று மோதல் சம்பவங்கள் நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. மாநிலத்தில் பொது அமைதி மற்றும் சகோதரத்துவம் காக்கப்பட வேண்டும். இனி இதுபோன்ற மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறை தீவிரப்படுத்த வேண்டும்," என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.
முன்னதாக மோதல் காரணமாக பாட்டியாலாவில் நேற்று இரவு 7 மணியில் இருந்து இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மோதலில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.