
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கையில் இருப்பு உள்ள பணத்தை, அனைத்து வங்கிகளிலும் செலுத்தி ரூ.4,500 வரை பெற்று கொள்ளலாம் என கூறினார். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள், வங்கிகளின் வாசலில் பணத்தை மாற்றுவதற்காக காத்துக் கிடக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதையடுத்து 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள். இப்படி பணத்தை மாற்றினாலும், புதிய ரூ.2,000 நோட்டுகள், ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 மற்றும் 10, 5 ரூபாய் நாணயங்கள் வழங்கப்படுகின்றன.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகள், தபால் நிலையங்களில் கடுமையான கூட்டம் காணப்படுகிறது. பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இதையொட்டி பொதுமக்களின் சிரமத்தை குறைக்க நடமாடும் ஏ.டி.எம் இயந்திரங்களை செயல்படுத்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது. அதன்பேரில், பொதுமக்களுக்கு உடனடியாக சேவை அளிக்க வேண்டும் என சில வங்கிகள் நடமாடும் ஏ.டி.எம். சேவையையும் தொடங்கியுள்ளன.
மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளான சென்னை அடையாறு, ராயபுரம், துறைமுகம் உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளில் நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் கவலை, அலைச்சல், சிரமம் இல்லாமல் எளிதில் பணம் எடுத்துக் கொள்கின்றனர்.