திமுகவினருக்கு அசைன்மெண்ட்: முப்பெரும் விழாவில் சீறிய முதல்வர் ஸ்டாலின்!

By Manikanda Prabu  |  First Published Sep 17, 2023, 8:24 PM IST

பாஜகவின் ஊழல் முகத்தை நாம் கிழிக்க வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்


திமுக பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா இன்று வேலூரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் அக்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில்,  'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பெரியார் விருது (கி.சத்தியசீலன்), அண்ணா விருது (க.சுந்தரம்), கலைஞர் விருது (ஐ.பெரியசாமி), பாவேந்தர் விருது (மலிகா கதிரவன்), பேராசிரியர் விருதுகளை (ந.இராமசாமி) முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Latest Videos

undefined

தொடர்ந்து, திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொண்டர்களாலேயே கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கப்பட்டேன். ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல. தோன்றிய காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருப்பது திமுக. பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் கொள்கை வழியில் திமுக செயல்படுகிறது. 2 கோடி திராவிட கொள்கைவாதிகளின் கோட்டை திமுக.” என பெருமிதம் தெரிவித்தார்.

மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள்!

பாஜகவின் ஊழல் முகத்தை நாம் கிழிக்க வேண்டும் என தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், மக்களிடம் பாஜகவின் ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டும். இதுதான் நம் முன்னே உள்ள முக்கிய பணி என கட்சியினருக்கு கட்டளையிட்டார்.

“திமுக 6  பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அனைத்து துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.  இது பலருக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசுக்கு நிதி ஆதாரமே வரி வருவாய் தான்.  ஆனால் ஜிஎஸ்டி என்ற பெயரில் நிதி வருவாயை பாஜக அரசு பறித்துள்ளது.  மாநில அரசுக்கு நிதி வருவாய் கிடைக்காமல் கபளீகரம் செய்கின்றனர்.” என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

எங்கள் முதல்வர் சொன்ன ரூ.1000 வந்தாச்சு. பிரதமர் சொன்ன ரூ15 லட்சம் எங்கே என்று கேட்பது போன்ற மீம்ஸ் பார்த்தேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா? கடந்த 9 வருடங்களில் ஒன்றிய பாஜக அரசு செய்த சாதனை என, எதையாவது கூற முடியுமா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

“மத்திய அரசிடம் புதுசா எதையும் கேட்கவில்லை. அவர்கள் சொன்னதைத்தான் கேட்கிறோம்.  கடந்த 9 ஆண்டுகளில் சிலிண்டர் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.  சிலிண்டர் விலையை உயர்த்தியது ஒன்றே பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை. 9 ஆண்டுகளாக விலையை உயர்த்திவிட்டு ரூ.200 மட்டும் குறைத்தால் மக்கள் நம்புவார்களா? அதேபோல் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு ரூ.155 லட்சம் கோடி  கடன் வாங்கி உள்ளது.” என முதல்வர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “புதிய கல்வி கொள்கை மூலம், தமிழக கல்வி வளர்ச்சியை அழிக்க நினைக்கிறார்கள். கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்கவே நீட் கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பறிக்கிறது. நீட் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்துள்ளது. சில தனியார் பயிற்சி மையத்தின் லாபத்துக்காக நீட் நடத்தப்படுகிறது. நீட் தேர்வால் கடந்த ஆண்டு 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பாஜக இரக்கமற்ற ஆட்சி நடத்துகிறது.” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி  வெல்லும் என நம்பிக்கை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமே நம்முடைய கூட்டணி வெற்றியடைய வேண்டும். பாஜக ஊழல் முகத்தை அம்பலப்படுத்தியாக வேண்டும்.  இந்தியாவை காக்க இந்திய கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.  உங்களில் ஒருவனாக கேட்கிறேன் அதற்கு நாம் முழுமையாக பாடுபடுவோம்.” என்றார்.

click me!