
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றினால் 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 415 ஆக இருந்த நிலையில் புதிதாக 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 108 பேரும் புதுடெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 41 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளன. மேலும் கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு 38ஆகவும் தமிழ்நாட்டில் 34 ஆகவும் ஆந்திர பிரதேசத்தில் 4 ஆக உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. இதுவரை 130 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி நாட்டில் மேலும் 6,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 7,091 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 162 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்தம் 76,766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி குறித்து பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 -18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். சிறார்களுக்கு பள்ளி அல்லது முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
60 வயதைக் கடந்தவர்கள்,இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இணை நோய் உள்ளோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறினார். மரபணு மற்றும் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.