#Breaking: DNA மற்றும் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகள் விரைவில் அறிமுகம் - பிரதமர் மோடி

By Thanalakshmi VFirst Published Dec 25, 2021, 10:38 PM IST
Highlights

மரபணு மற்றும் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
 

நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசி குறித்து பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார். ஜனவரி 3 ஆம் தேதியில் இருந்து 15 -18 வயது உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். குழந்தைகளுக்கு பள்ளி அல்லது முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். 60 வயதைக் கடந்தவர்கள்,இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இணை நோய் உள்ளோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

நாட்டில் இதுவரை 90% மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் . இதுவரை 60% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி இருக்கிறது. நமது பொருளாதாரமும் சீரான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகள் அனைத்து மத்திய அரசால் செய்யபட்டு வருகிறது என்று கூறினார்.

உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். ஒமைக்ரான் வைரஸை கண்டு பீதியடைய வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள் என்று அறிவுறுத்தினார். இந்தியாவில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயாராகவுள்ளன எனவும் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க 90 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 500000 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் இப்போதும் இருக்கிறது. கிட்டதட்ட 3000 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

உலகிலே முதல் முறையாக மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.  மேலும் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தபடவுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

click me!