‘பேஸ்புக், டுவிட்டரில் பதிவிடும் ராணுவ வீரர்களுக்கு தண்டனை’ தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 08:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
‘பேஸ்புக், டுவிட்டரில் பதிவிடும் ராணுவ வீரர்களுக்கு தண்டனை’ தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை

சுருக்கம்

பேஸ்புக், டுவிட்டரில் பதிவிடும் ராணுவ வீரர்களுக்கு தண்டனை’
தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை


புதுடெல்லி, ஜன.:- ராணுவம், பாதுகாப்பு துறையில் உள்ள குறைபாடுகளை, பிரச்சினைகள்  குறித்து பேஸ்புக், டுவிட்டரில் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்தால் வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று, ராணுவ தலைமைதளபதி பிபின் ராவத் எச்சரிக்கை செய்துள்ளார்.

கே.எம். கரியப்பா

கடந்த 1949ம் ஆண்டு ஜனவரி 15ந்தேதியன்று, லெப்டினன்ட் ஜெனரல் கே.எம்.கரியப்பா, நாட்டின் முதல் ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அன்றிலிருந்து ஜனவரி 15ந்தேதி ஆண்டுதோறும் ராணுவ தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கரியப்பாவுக்கு முன்னதாக ஆங்கில தளபதி ஜெனரல் சர் பிரான்சிஸ் பட்சர் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.

அணிவகுப்பு - சாகசம்

இந்நிலையில், நாட்டின் 69-வது ராணுவ தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுடெல்லி கே.எம். கரியப்பா மைதானத்தில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர். முன்னதாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதனை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் ஏற்றுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக சிறப்பாக பணிபுரிந்த வீரர்களுக்கு பதக்கங்களை அவர் வழங்கி கவுரவம் செய்தார்.

‘தண்டனை நிச்சயம்’

இதையடுத்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- ஒவ்வொரு வீரரும் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை அல்லது அதிருப்தி இருந்தால் அதுகுறித்து ராணுவ நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். அப்படி தெரிவித்தும் வீரர்களுக்கு திருப்தியில்லை என்றால் என்னிடம் நேரடியாக வந்து குறைகளை கூறலாம். ஆனால் விதிகளை மீறி பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், தங்களது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

‘அமைதியே விருப்பம்’

இவ்வாறான செயல்கள் ராணுவ வீரர்கள் மீது அவப்பெயரை உண்டாக்கும். எல்லையில் நமது வீரர்கள் மிகுந்த வீரத்துடன் செயலாற்றி வருகின்றனர். எல்லையில் அமைதியை நிலைநாட்ட ராணுவம் விரும்புகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்களை செய்துவந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். வடக்கு எல்லைப் பகுதியில் சீனாவுடன் அமைதியான போக்கையே இந்திய ராணுவம் விரும்புகிறது. இரு தரப்பும் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இதன் காரணமாக இந்திய – சீன எல்லையில் பதற்றம் குறைந்துள்ளது.

35 நாடுகள் பங்கேற்பு

நமது வலிமை குறித்து நம்முடைய எதிரிகள் எச்சரிக்கையுடன் உள்ளார்கள். எந்த இடத்திலும், எத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் இந்திய ராணுவம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ராணுவ தின நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ரஷியா, சீனா, இஸ்ரேல் உள்பட 35 நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். டெல்லியைப் போன்றே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா உள்பட நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், முக்கிய நகரங்களிலும் ராணுவ தினம் கடைபிடிக்கப்பட்டது.                            

பேச்சின் பின்னணி

அண்மையில் தேஜ் பகதூர் என்ற ராணுவ வீரர், தங்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி, அதுதொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலை தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் தொடர்ச்சியாக துணை ராணுவத்தை சேர்ந்த ஜீத் சிங் என்பவரும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து பிரதமர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் பதிவிடும் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ராணுவ தலைமை தளபதி பேசியுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

Union Budget 2026: திருந்தாத மத்திய அரசு..பாஜகவை விளாசிய ராகுல் காந்தி.. நிர்மலா சீதாராமன் பதிலடி!
நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 26 நிமிடங்கள் வாசிப்பு.. மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் முழு விவரம்