
நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் குழுக் கூட்டம் 9-வது முறையாக டெல்லியில் இன்று(திங்கள்கிழமை) கூடுகிறது. மாநில அரசுகள், மத்தியஅரசுக்கும் இடையே வருவாயை பிரித்துக்கொள்வது தொடர்பான பிரச்சினைகளில் தீர்வு காணப்பட்டு, ஏப்ரல் 1-ந்தேதி சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வருமா? என்பது இந்த கூட்டத்தில் தெரியவரும்.
ஜி.எஸ்.டி.கவுன்சில்
நாடுமுழுவதும் ஒரே சீரான மறைமுக வரியான சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) முறையை வரும் ஏப்ரல் 1-ந்தேதிமுதல் நடைமுறைப்படுத்த மத்தியஅரசு தீவிரமாக இருக்கிறது.
ஜி.எஸ்.டி. சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதன் துணைச்சட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி, மாநில ஜி.எஸ்.டி., மத்திய ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் சரத்துக்களை வகுக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் உருவாக்கப்பட்டது. இதில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைவராகவும், மாநிலங்களின் நிதிஅமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
முடிவின்றி 4 கூட்டம்
ஜி.எஸ்.டி. சட்டத்தில் பெரும்பான்மையான விசயங்கள் முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், வருவாயை பிரித்துக் கொள்வதில் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த 4 கூட்டத்திலும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் முடிந்தது.
முக்கிய பிரச்சினைகள்
குறிப்பாக ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி வருவாய் ஈட்டி, வரிசெலுத்தும் பிரிவினரை மத்தியஜி.எஸ்.டி. அல்லது மாநில ஜி.எஸ்.டி. வரியின் கீழ் கொண்டுவருவது, மற்றும், மாநிலங்களின் கடற்பகுதிக்குள் வரும் சரக்கு கப்பல்களுக்கு மாநில அரசு வரிசூலிப்பதா ? அல்லது மத்தியஅரசு வரிவசூலிப்பதா ? என்பது குறித்த பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.
அதுமட்டுமல்லாமல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காரணமாக மாநிலங்களுக்கு வருவாய் இழப்பீடு முன்பு ரூ. 58 ஆயிரம் கோடியாக இருந்தது, இப்போது ரூ. 90 ஆயிரம் கோடியாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகள் அனைத்தும் இந்த கூட்டத்தில் பேசி இறுதியான முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
நம்பிக்கை
கடந்த கூட்டத்தின் முடிவில் நிதி அமைச்சர் ஜெட்லி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “ ஜி.எஸ்.டி. வரியில் பெரும்பாலான விசயங்கள் பேசி முடிக்கப்பட்டுவிட்டன. சில முக்கிய விசயங்கள் மட்டும் நிலுவையில் இருக்கிறது. அதுவும் அடுத்த சிலவாரங்களில் பேசி முடிக்கப்பட்டு, ஏப்ரல் முதல்தேதியில் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்துவிடும் என நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.
காலாவதியாகுமா?
அதேசமயம் ஏப்ரல்மாத்தில் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த முடியாமல் செப்டம்பர் 16-ந்தேதிக்குள் அமல்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால், ஜி.எஸ்.டி. சட்டம் காலாவதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.