கிங் மேக்கரின் இளவரசன்! சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By SG BalanFirst Published Jun 6, 2024, 1:21 PM IST
Highlights

Chandrababu Naidu Son Nara Lokesh Net Worth: லோகேஷ் சமீபத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, 2019ஆம் ஆண்டில் ரூ.373 கோடியாக இருந்த சொத்து மத்திப்பு இப்போது 542 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஐந்து ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 45 சதவீதம் உயர்ந்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக மாறியிருக்கிறார். அவரது மகன் நாரா லோகேஷ் என்ன செய்கிறார்? அவரது சொத்து மதிப்பு? என்று பார்க்கலாம்.

41 வயதான நாரா லோகேஷ், முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவின் (என்.டி.ஆர்.) பேரன். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்த திரு லோகேஷ், பின் தன் தாத்தா மற்றும் தந்தையின் வழியில் அரசியல்வாதியாக மாறினார்.

Latest Videos

நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் மங்களகிரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் லாவண்யாவை எதிர்த்து போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லாவண்யாவை 91,413 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நாரா லோகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் எனத் திட்டமிட்டு தொடந்து தீவிர பிரச்சாரம் செய்துவந்தார். ஜனவரி 2023 தனது நடைபயணத்தைத் தொடங்கிய நாரா லோகேஷ், குப்பத்தில் இருந்து இச்சாபுரம் வரை 4,000 கிலோமீட்டர் தூரத்திற்குப் பயணித்தார். 400 நாள் நடைபெற்ற யுவ கலாம் பாதயாத்திரை (இளைஞர்களின் குரல்) அவருக்கு பெரிய செல்வாக்கைக் கொடுத்தது.

2019 ஆந்திர சட்டசபை தேர்தலில், தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், லோகேஷ் தனது குடும்பச் சொத்து மதிப்பு ரூ.373.63 கோடி என்று அறிவித்திருந்தார். தனது அசையும் சொத்து மதிப்பு ரூ.314.68 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.92.31 கோடி எனக் குறிப்பிட்டிருந்தார். மனைவி பிராமணியின் சொத்துகளில் ரூ.45.06 கோடி அசையும் சொத்துகளும், ரூ.35.59 கோடி அசையா சொத்துகளும் அடங்கும் என்றும் கூறியிருந்தார்.

லோகேஷ் சமீபத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, 2019ஆம் ஆண்டில் ரூ.373 கோடியாக இருந்த சொத்து மத்திப்பு இப்போது 542 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஐந்து ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 45 சதவீதம் உயர்ந்துள்ளது. மங்களகிரி சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, தாக்கல் செய்த சொத்து மதிப்பு 2019ஆம் ஆண்டைவிட 169 கோடி ரூபாய் அதிகமாக உள்ளது.

இப்போது, அவரது மனைவி பிராமணி மற்றும் மகன் வைத்திருக்கும் அசையும் சொத்துகளின் மதிப்பு ₹ 394 கோடி. இந்த சொத்துக்கள் பெரும்பாலும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ், ஹெரிடேஜ் ஃபின்லீஸ், நிர்வாணா ஹோல்டிங்ஸ் மற்றும் மெகாபிட் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் பங்குகளாக உள்ளன.

ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ், மணிகொண்டா, மதினகுடா மற்றும் மாதப்பூர் ஆகிய இடங்களில் லோகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வைத்திருக்கும் அசையா சொத்துகளின் மதிப்பு ₹ 148 கோடி. அமராவதி உள் சாலை ஊழல் வழக்கு உள்பட 24 கிரிமினல் வழக்குகள் இவர் மீது போடப்பட்டுள்ளன.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. இதில், தெலுங்கு தேசம் மட்டும் 135 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜனசேனா 21, பாஜக 8 இடங்களைப் பெற்றுள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 11 இடங்களை மட்டும் பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களை வென்றுள்ளனது. பாஜக 3, ஜனசேனா 2 இடங்களைப் பெற்றன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது.

click me!