
ஆயில் மசாஜ் செய்தால், பல வலிகள், சுளுக்குகள் சரியாகி உடம்பு புறா இறகு போன்று மெலிதாக மாறும் என கேட்டு இருக்கிறோம். ஆனால், அதே மசாஜ் தவறாக, தவறான ஆட்கள் மூலம் செய்யும் போது, அது உயிருக்கே ஆப்பு வைத்துவிடும் என்பது பலருக்கு தெரியவில்லை.
அப்படி ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. அதுவும் பெற்ற தாய் தனது 23வயது மகனுக்கு காலில் மசாஜ் செய்தபோது, அது விபரீதமாகி உயிரே பறி போய்விட்டது என்றால் பாருங்கள். டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளிவரும் மருத்துவ இதழில் இந்த சம்பவம் குறித்து கூறப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 23வயது இளைஞர் ராகேஷ்(பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி பாட்மிண்டன் விளையாடிக் கொண்டு இருந்தபோது, கனுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற ராகேசுக்கு, காலை அசைக்காமல் இருக்க பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மாவுக்கட்டின் இருக்கம் அதிகமானதையடுத்து அக்டோபர் 24-ந்தேதி அவரின் கட்டு பிரிக்கப்பட்டது. அவரும் லேசாக நடக்கத் தொடங்கினார். ஆனால், அவரின் கால் நரம்பில் சிறிதளவு ரத்தம் கட்டியாக இருப்பது தெரியவந்து.
இதையடுத்து, அதற்கு மருத்துகள் கொடுத்து அவரை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பினர். இந்நிலையில், அக்டோபர் 31ந்தேதி டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனைக்கு ராகேஷின் தாய், ராகேஷை,சுயநினைவற்ற நிலையில் ஆம்புலென்சில் கொண்டு வந்து அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார். மருத்துவர்கள் ராகேஷுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் உயிரைக் காப்பாற்ற முடியாததையடுத்து, அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
அதன்பின், ராகேஷின் தாயிடம், இது குறித்து மருத்துவர்கள் விசாரணை நடத்தினர், அப்போது, அவர் கூறுகையில், “ ராகேஷ் கால் வலிக்கிறது என்று கூறினான். அதனால், அவன் காலில் ரத்தம் உறைந்து இடக்கும் இடத்தில் லேசாக எண்ணெய் வைத்து மசாஜ் செய்தேன். திடீரென அவன் உடல் வியர்த்து, பேச்சு, மூச்சு இல்லாமல் சாய்ந்துவிட்டான்” எனக் கூறி புலம்பினார்.
அதன்பின், மருத்துவர்கள் ராகேஷின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதில், ராகேஷின் காலில் இருந்து ரத்தத்தை இதயத்தின் தமனிக்கு கொண்டு செல்லும் நரம்புகள் உள்ளன. இந்த நரம்பில் ரத்தம் லேசாக உறைந்துள்ளது.
அந்த பெண் ஏறக்குறைய 30 நிமிடங்கள் வரை மசாஜ் செய்த போது உறைந்திருந்த ரத்தம், சீரான ரத்த ஓட்டத்துடன் கலந்து இதயத்தின் தமனியில் சென்று அடைப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது, இதயத்துக்கு சுவாசக் காற்றுக்கிடைக்காமல், ராகேஷ் மூர்ச்சையாகி இறந்துள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.
இது குறித்து எம்ய்ஸ் மருத்துவர் பேஹ்ரா கூறுகையில், “ இந்த இளைஞர் விசயத்தில் அந்த தாய் மசாஜ் செய்யத் தெரியாமல் செய்து, அது உயிருக்கே வினையாகப் போய்விட்டது.
மசாஜ் செய்யத் தெரியாமல் இதுபோல் தவறான நபர்கள், தவறாக மசாஜ் செய்யும் போது, அது சில நேரங்களில் நரம்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கே கேடு விளைவிக்க சாத்தியங்கள் உண்டு. இந்த செய்தி, மசாஜ் கலை தெரியாமல் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.