
ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக ரூ.5 ஆயிரம் வைத்து இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மாநிலங்கள் அவையில் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
குறைந்தபட்ச இருப்பு
நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, சமீபத்தில் விடுத்த அறிவிப்பில், சேமிப்பு கணக்கு வைத்து இருப்போர் குறைந்த பட்ச இருப்பாக ரூ.5000 வைத்து இருக்க வேண்டும் இல்லாவிட்டால், ரூ.100 மற்றும் வரிகளுடன் அபராதம் விதிக்கப்படும்.
இந்த உத்தரவு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்து இருந்தது. இந்த அறிவிப்புக்கு ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது, கட்சியினரும் இதை கடுமையாக விமர்சித்தனர்.
மாநிலங்கள் அவை
மாநிலங்கள் அவையில் இந்த அறிவிப்பு நேற்று எதிரொலித்தது. கேள்வி நேரம் முடிந்த பின்புமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. கே.கே. ராகேஷ் பேசினார்.
அவர் பேசுகையில், “ ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக ரூ.500க்கு பதிலாக ரூ.5000 ஆயிரம் வைத்து இருக்க வேண்டும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அவ்வாறு பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தது.
ஸ்டேட் வங்கியின உத்தரவால், ஏறக்குறைய 31கோடி டெபாசிட்தாரர்கள் பாதிக்கப்படுவார்கள். நாட்டின் மிகப்பெரிய வங்கியியான ஸ்டேட் வங்கியை மற்ற வங்கிகள் பின்பற்றி வருகின்றன.
தண்டனை
டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்துவதற்காக மக்களை வங்கிக்கணக்கு தொடங்க மத்திய அரசு ஊக்கப்படுத்தியது. அந்த உத்தரவைப் பின்பற்றி வங்கிக்கணக்கு தொடங்கிய ஏழை, சமானிய மக்கள் இப்போது தண்டிக்கப் படுகிறார்கள்.
ஸ்டேட் வங்கியின் முடிவு ஒருபோதும் வசதிபடைத்தவர்களை பாதிக்காது. ஆனால், ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும். அரசு வங்கிகள் அனைத்தும் வாராக்கடனால் கடுமையான சிக்கலில் இருக்கின்றன.
நடவடிக்கை இல்லை
இந்த வாராக்கடன் அனைத்தும் சமானிய மக்களுக்கு கடன் கொடுத்ததால் ஏற்படவில்லை,கார்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்ததால் ஏற்பட்டது. கடன்வாங்கி திருப்பிக்கட்டாதகார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
ரத்து
மாறாக ஸ்டேட் வங்கியின் முடிவு என்பது, நாட்டு மக்களின் பணத்தை திருடுவதற்கு சமம், நாட்டின் நலனுக்கு நலனுக்கானது அல்ல. சேமிப்புகணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம் என்ற ஸ்டேட் வங்கியின் முடிவில் மத்திய அரசு தலையிட்டு, ரத்து செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.