
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் நிலவிய வெப்ப நிலையில், 122 ஆண்டுகள் சாதனையை முறியடித்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 1901 ஆண்டு மார்ச் மாதத்தில் இதேபோன்ற வெப்ப நிலை நிலவியதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
"2022 ஆண்டு மார்ச் மாதத்தில் வெப்பநிலை சராசரியாக 33.1 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்துள்ளது. இது முந்தைய 2010 மார்ச் மாதத்தில் இருந்த 33.09 டிகிரி செல்ஷியசை முறியடித்து இருக்கிறது," என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மிக நீண்ட வரண்ட வானிலை நிலவியதால் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் வெப்ப நிலை அதிகரிக்க காரணமாக அமைந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
எச்சரிக்கை:
கடந்த வியாழக் கிழமை டெல்லி முழுக்க வெப்பம் வாட்டி வதைத்தது. இதன் காரணமாக டெல்லியின் மூன்று இடங்களில் அதிகபட்சமாக வெப்பம் 41 டிகிரியை கடந்து பதிவாகி இருந்தது. மேலும் ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நாடு முழுக்க வெப்பநிலை மேலும் அதிகளவில் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் மார்ச் 2022 மாதத்தில் மிக அதிக வெப்பம் பதிவானது. இந்தியாவின் மத்திய பகுதிகளில் இரண்டாவது முறையாக அதிகளவு வெப்பம் பதிவானது. இரு பகுதிகளிலும் கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்க துவங்கி விட்டது.
பருவநிலை மாற்றம்:
"இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிக அதிக வெப்பம் கடந்த இரண்டு தசாப்தங்களில் தான் பதிவாகி இருக்கிறது. பருவநிலை மாற்றம் வானிலையை மிகவும் மோசமாக பாதித்து வருகிறது. வெயில் மற்றும் மழை என இரு பருவங்களிலும் வானிலை அதன் உச்சநிலையை எட்டும்," என தேசிய வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் ராஜேந்திர ஜெனமணி தெரிவித்து இருக்கிறார்.
"இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் இரண்டாவது பாதியில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் அதிகளவில் பதிவாகி இருக்கிறது. டெல்லி, ஹரியானா மற்றும் இதிர மலை பகுதிகளிலும் வழக்கத்தை விட அதிகளவு வெப்பம் பதிவாகி இருக்கிறது. சமீப காலங்களில் பல பகுதிகளில் மழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்வதும், வெப்பம் வழக்கத்தை விட அதிகளவில் பதிவாகி வருகிறது," என அவர் மேலும் தெரிவித்தார்.