சூடுபிடிக்கும் மராத்தா இட ஒதுக்கீடு: அரசுக்கு ஆலோசனை வழங்க குழு அமைப்பு!

By Manikanda Prabu  |  First Published Oct 31, 2023, 2:34 PM IST

மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து மகாராஷ்டிரா அரசுக்கு ஆலோசனை வழங்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்


மராத்தா ஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிரா அரசுக்கு பரிந்துரை செய்யவும், உச்ச நீதிமன்றத்தில் முன்மொழியப்பட்ட சீராய்வு மனுவை சமர்பிக்கவும் 3 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என்று மாகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவின் கீழ், அரசு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிர மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தினுடைய இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக ஜல்னா மாவட்டத்தில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் கடந்த 25ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மராட்டிய இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே ஈடுபட்டு வருவதற்கிடையே, அம்மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், தலைநகர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இடஒதுக்கீடு தொடர்பாக சீராய்வு மனு தொடர்பாக மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும். அதை உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்யும். நிபுணர் குழுவில் மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருப்பர் என்றார்.

“முந்தைய அரசாங்கம் மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீட்டைத் தக்கவைக்கத் தவறியது ஏன் என்ற விவரங்களுக்கு நான் செல்ல விரும்பவில்லை. மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்த இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.” என்றும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மராத்தா சமூகத்தினருக்கு குன்பி சாதிச் சான்றிதழ் வழங்குவது எப்படி என்பது குறித்த அறிக்கையை சமர்பிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்தீப் ஷிண்டே தலைமையில் ஒரு குழுவை மாநில அரசு ஏற்கனவே அமைத்துள்ளது. இந்த குழு தனது அறிக்கையை நாளை சமர்ப்பித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.” என்றார்.

மராத்தா சமூகத்தின் நிலுவையில் உள்ள கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றத் தவறினால், மகாராஷ்டிரா முழுவதும் உள்ள கிராமங்களில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும் என்று மராட்டிய இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார். அதேசமயம், சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்பட்ட மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் உறுதியாக இருப்பதாக மகாராஷ்டிர அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

அதானியை தொட்டால் எதிர்கட்சியினரின் செல்போன் ஒட்டு கேட்பு - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

கடந்த 2018ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, மாநில அரசு மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கியது. அதனை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இந்த நிலையில், மராத்தா ஒதுக்கீடு போராட்டங்களை முன்னின்று  நடத்தி வரும் மனோஜ் ஜராங்கே இரண்டு மாதங்களுக்கு முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அந்த சமயத்தில், மாநில அரசு தலையிட்டு அந்த போராட்டத்தை முடித்து வைத்தது. இதையடுத்து மராத்தா இட ஒதுக்கீட்டு பிரச்னைக்கு தீர்வு காண மனோஜ் ஜராங்கே, மாநில அரசுக்கு 40 நாட்கள் காலக்கெடு விதித்தார். ஆனால், அந்தக் காலக்கெடு முடிந்து விட்டது. எனவே, மாநில அரசு இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, தனது கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மனோஜ் ஜராங்கே ஈடுபட்டிருக்கிறார். அவரது உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது மராத்தா போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!