
கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜனதா 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா வாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேட்சைகள் தலா 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், கோமந்தக் மற்றும் கோவா முன்னேற்றக் கட்சியின் ஆதரவைப் பெற பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டன.
இதனிடையே மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் மகாராஷ்டிரா வாடி கோமந்தகட்சி, கோவா பார்வர்டு பிளாக் மற்றும் 2 சுயேட்சை வேட்பாளர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தனர்.
இதனையடுத்து கோவா மாநில பா.ஜ.க சட்டமன்றக் கட்சித்தலைவர் மனோகர் பாரிக்கரை ஆட்சி அமைக்க ஆளுநர் மிருதுளா சின்ஹா அழைப்பு விடுத்தார். மேலும் 15 நாட்களுக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
கோவா மாநில முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் இன்று மாலை பதவி ஏற்பார் என்றும் அவருடன் மேலும் 8 மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் மனோகர் பாரிக்கர் பதவி ஏற்க கவர்னர் மிர்துளா சின்கா அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேகர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியினரைப் பார்த்து உங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தும் ஏன் நீங்கள் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர் மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக பதவி ஏற்க தடை விதிக்க முடியாது என்றும் அவர் உடனடியாக சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.