
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.
இதில், கோவா சட்டமன்றத்தின் 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17, பாஜக 13, இதர கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து, பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டது. அந்த கடிதத்தில், தங்களுக்கு 22 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 17 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல், 13 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கின் விசாரணை, இன்று உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் தரப்பில், கோவாவில் ஆட்சி அமைக்க 21 எம்எல்ஏக்கள் போதுமானது.
எங்களது கட்சியில் 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். சுயேட்சை எம்எல்ஏக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, நாங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், 13 எம்எல்ஏக்களை கொண்டுள்ள பாஜகவை, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளது தவறான செயல் என வாதிட்டது.
இதை ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம், நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், இன்று மாலை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, ஆட்சி அமைக்கும் படி உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, இன்று மாலை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தால், மனோகர் பரிக்கர் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என தெரிகிறது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.