"வங்கியில் பணம் போட்டுவிட்டு எடுக்க முடியாத நிலை உலகில் எந்த நாட்டில் உள்ளது?" மோடி பதில் கூற முடியுமா? - மன்மோகன் சிங் கேள்வி

 
Published : Nov 25, 2016, 09:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
"வங்கியில் பணம் போட்டுவிட்டு எடுக்க முடியாத நிலை உலகில் எந்த நாட்டில் உள்ளது?" மோடி பதில் கூற முடியுமா? - மன்மோகன் சிங் கேள்வி

சுருக்கம்

வங்கியில் பணம் போடும் மக்கள் பணத்தை திரும்ப எடுக்க முடியாத நிலை உலகில் வேறு எந்த நாடுகளில் உள்ளது? என்பதை பிரதமர் மோடி கூற முடியுமா? என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேள்வி எழுப்பினார்.

500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்பட்ட நிலையில், பிரதமர் மோடிதான் பதிலளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகிறது.

எதிர்க்கட்சிகள் அமளி

நேற்று மாநிலங்களவை தொடங்கியதுமே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. துணைத் தலைவர் குரியன் எதிர்க்கட்சியினரை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம்நபி ஆசாத் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச விரும்புகிறார் என்றார்.

அவை துணைத் தலைவர் குரியன் பேசுகையில், "நான் மன்மோகன் சிங்கை பேசுவதற்கு அனுமதிக்கிறேன், நான் அவர் பேசுவதை தடுக்கவில்லை" என்றார்.

மன்மோகன் சிங் பேச்சு

மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த் சர்மா பேசுகையில், நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றார். எதிர்க்கட்சியினர் அமளியினால் மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து 12 மணிக்கு அவை மீண்டும் தொடங்கியது.

அவை 12 மணிக்கு கூடியபோது பிரதமர் நரேந்திர மோடி அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது விவாதத்தை தொடங்கி வைத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:-

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை திட்டமிடப்படாமல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் குறையும். நான் கூறுவது மிகவும் குறைவான பாதிப்பே. உண்மையில் பாதிப்பு இதைவிட அதிகமாக இருக்கும்.

எந்த நாட்டில் இந்த நிலை?

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் நாட்டில் ஏழைகள், சாதாரண குடிமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பிரதமர் மோடி அதையெல்லாம் உணர்ந்து இருப்பார் என நம்புகிறேன்.

அரசின் நடவடிக்கை நமது பணப் பரிவர்த்தனை மற்றும் வங்கி முறைகளில் மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும். பணத்தை வங்கியில் போட முடியும். ஆனால் அதை திருப்பி எடுக்க முடியாது என்ற நிலை உலகில் எந்த நாட்டில் உள்ளது? என்பதை பிரதமர் மோடி கூற வேண்டும். அரசின் நடவடிக்கையை கண்டிக்க இது ஒன்றே போதும் எனக் கருதுகிறேன்.

கடும் பாதிப்பு

500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை நாட்டின் வேளாண் உற்பத்தி, சிறு தொழில் வளர்ச்சி, மற்றும் அமைப்பு சாரா துறைகளை கடுமையாக பாதித்துள்ளது. நாட்டில் 90 சதவீத மக்கள் அமைப்பு சாரா துறைகளிலேயே உள்ளனர். கிராம மக்களுக்கு அதிக சேவைகளை அளித்து வரும் கூட்டுறவுத்துறையும் முடக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களிடம் 50 நாள் அவதியைப் பொறுத்துக் கொள்ளுமாறு அவகாசம் கேட்கிறார் பிரதமர் மோடி. 50 நாட்கள் என்பது குறைவான காலம்தான். ஆனால் அதற்குள் கடும் விளைவுகள் ஏற்படும். மக்கள் மிகக்கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள். அதை பிரதமர் நினைத்துப் பார்க்க வேண்டும்.

துயரங்களை போக்க வேண்டும்

கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் சரியானதுதான். ஆனால் அதை இப்போது செயல்படுத்தும் விதம் தவறு. தற்போது மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது.

ஆனாலும் கூட இனியாவது பிரதமர் மோடி மக்களின் துயரங்களை அறிந்து தகுந்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்புகிறேன்.

இவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!