
மன்மோகன் சிங் ஆட்சியில் தான் 2ஜி, நிலக்கரி, காமன்வெல்த் ஊழல்களால் பெரும்பாலான கருப்பு பணம் பெருகியது என அருண்ஜெட்லி குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டு தொடர் கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது. இதில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பை எதிர்த்து, டெல்லி ராஜ்யசபாவில் நேற்று விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
உயர் மதிப்பு கொண்ட இந்த ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் அளவுக்கு குறையும் என அவர் குற்றம் சாட்டினார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரும் நிர்வாக தோல்வி எனவும், திட்டமிட்ட திருட்டு மற்றும் சட்டப்பூர்வ கொள்ளை எனவும் அவர் கூறினார்.
மன்மோகன் சிங்கின் இந்த கருத்துகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பதிலளித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தங்கள் ஆட்சியில் கருப்பு பணம் அதிகரிப்பது குறித்து கவலை கொள்ளாதவர்கள்தான் தற்போதைய நடவடிக்கைகளை முட்டாள்தனம் என்று வர்ணிக்கின்றனர். கருப்பு பணத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து எங்களுக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை.
ஏனென்றால், கடந்த 2004 - 14ம் ஆண்டுகால மன்மோகன் சிங் ஆட்சியில்தான் கருப்பு பணம் பெருகியது. மொத்த பதவி காலத்தையும் சூழ்ந்திருந்த 2ஜி, நிலக்கரி, காமன்வெல்த் போன்ற ஊழல்களால்தான் கருப்பு பணம் உருவானது. அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொள்கையற்று இருந்தது. எனவே அவர்களால் மோடி அரசைப்போல கடுமையான முடிவுகளை எடுக்க முடியவில்லை.
தற்போதைய நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் நிழல் பொருளாதாரத்தில் குவிந்துள்ள பணம் தேசிய நீரோட்டத்துக்கு வரும்போது ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை நடுத்தர மற்றும் நீண்டகால பலன் அளிக்கும்.
இந்த நடவடிக்கையால் வங்கிகளில் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் தொழில்துறைகளுக்கு கடன் வழங்க ஏதுவாக இருக்கும். எனவே இது நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்ட சரியான முடிவாகும்.
இந்த பிரச்சனையில் விவாதம் நடத்த தயார் என்ற மத்திய அரசின் நிலை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தொடக்க நாளில் இருந்தே மிகவும் தெளிவாக உள்ளது. ஆனால் இந்த விவாதத்தை தவிர்ப்பதற்கான வழிகளை எதிர்க்கட்சிகள் தேடி வந்தன.
இந்த விவாதத்தில் பிரதமர் பங்கேற்பார் என நேற்று காலையில் அறிவிக்கப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சிடைந்தனர். எனவே இந்த விவாதத்தில் இருந்து தப்பி செல்வதற்கான காரணங்களை அவர்கள் தற்போது தேடி வருகின்றனர்.
ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கும் முடிவு ரகசியமாக இருந்தது. இதுபற்றி யாருக்கெல்லாம் தெரிய வேண்டுமோ? அவர்கள் தெரிந்து இருந்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் முரணாக உள்ளது.
இந்த பிரச்சனையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பேட்டியளிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். அதிகாரிகள் எல்லாரும் செயல்படுவதில்தான் கவனம் செலுத்துவார்களே தவிர தொலைக்காட்சியில் முகம் காட்ட விரும்புவதில்லை.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.