மணிப்பூர் வீடியோ தொடர்பான கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ நேற்று முன் தினம் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லையென்றால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுப்போம் எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மணிப்பூர் கலவரம்.. இரு பெண்களுக்கு நடந்த உச்சகட்ட கொடுமை - மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்!
மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் தப்ப முடியாது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், பெண்களை நிர்வாணமாக அழைத்துச்செல்லும் வீடியோவை பகிர வேண்டாம் என ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் கடந்த 63 நாட்களுக்கு முன்பே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தவுபால் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுய்ரெம் ஹெராதாஸ் மெய்தி என்பவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். பெண் ஒருவரை நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோவில் பச்சை நிற சட்டை போட்டிருந்தவர்தான் அவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மணிப்பூர் வீடியோ தொடர்பான கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஹுய்ரெம் ஹெராதாஸ் மெய்தியின் மர்ம நபர்களால் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் பெரும்பாலும் பெண்களே உள்ளனர்.