
மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வடகிழக்கு மாநிலத்தில் இனக்கலவரம் வெடித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இரு பிரிவு மக்களிடையே கலவரம் நீடித்து வருகிறது. கலவரத்தை ஒடுக்குவதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதன் எதிரொலியாக அண்மையில், மாநில முதல்வர் பிரேன் சிங் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினார். இதனிடையே, முதல்வர் பிரேன் சிங் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு அதிக கட்டணம் ஏன்?
இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாகத் தெரிவித்தனர். அதற்கு முன்பாக ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்த முதல்வர் பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.
தனது ராஜினாமா கடிதத்தில், மணிப்பூர் மக்களுக்கு சேவை செய்வது ஒரு மரியாதை என்று பிரேன் சிங் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் சரியான நேரத்திலான நடவடிக்கைகளுக்கும் மாநில மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அடுத்த நடவடிக்கை குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பிரேன் சிங் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதையடுத்து, பாஜக எம்.பி. சம்பித் பத்ரா, மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் மணிப்பூர் ஆளுநரை அவர் சந்தித்தார்.
எம்எல்ஏககள் போர்க்கொடி:
பிரேன் சிங் 2017 முதல் மணிப்பூர் முதல்வராக இருந்து வருகிறார். அவரது முதல் பதவிக் காலத்தில், பல எம்எல்ஏக்கள் அவரது தலைமையின் மீது அதிருப்தி அடைந்தனர். முதல்வர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்கவும் கட்சித் தலைமை மூலம் முயற்சி செய்தனர். ஆனால் பிரேன் சிங்க தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டு 2019 தேர்தலில் இரண்டாவது முறையாகவும் முதல்வராகப் பதவியேற்றார்.
இருப்பினும், அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், பல பாஜக எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி வலுவடைந்தது. மே 3, 2023 அன்று மணிப்பூரில் மூண்ட வன்முறையைத் தொடர்ந்து, அவரது தலைமைக்கு எதிர்ப்பு தீவிரமடைந்தது. பத்து குக்கி எம்எல்ஏக்கள் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரினர். அடுத்தடுத்த நாட்களில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான எம்எல்ஏக்கள் தலைமை மாற்றத்திற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
20 வருடங்களாக ரகசிய தியானம் செய்யும் ரஜினிகாந்த்; காரணம் என்ன தெரியுமா?