
கணவன், மனைவிக்கு இடையே வார்த்தை மோதல்களும் சண்டைகளும் சகஜம் தான். இதனால் எழும் கோப தாபங்களையும் பிரிவு வரை செல்லும் கதைகளையும் நாம் கண்டு, அல்லது கேட்டிருக்கிறோம். இப்படி மனஸ்தாபங்கள் உந்தித் தள்ள தம்பதிகள் பலரும் முதலில் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்து, பிரச்னையை மேலும் மேலும் பெரிதாக்குவார்கள். அதையும் நாம் கண்டிருக்கிறோம்.
தில்லியைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி மதுர் வெர்மா, தனது டிவிட்டர் பதிவில் ஒரு வீடியோ பகிர்ந்திருந்தார். அதில், ஒரு மனிதர் மிகவும் பிரபலமான பாலிவுட் பாடலைப் பாடுகிறார். “நா சீகா ஜீனா தேரா பினா ஹம்தம்” என்று தொடங்கும் பாடலைப் பாட, அருகே இருக்கும் அவர் பெண் அந்த மனிதரின் தோளில் சாய்கிறார். இது நடப்பது, ஜான்சி காவல்நிலையத்தில். சுற்றிலும் காவலர்கள் இருக்க இந்தப் பதிவு பளிச்சிடுகிறது.
இந்த வீடியோவுக்கு மதுர் வெர்மா கொடுத்த தலைப்பு, ‘காதல் வெல்லும்’ என்பதே!
சரி அப்படி என்ன நடந்தது?
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை அடுத்து, அவர்களின் உறவினர்கள் சமரசம் பேசி இருவரையும் சேர்த்துவைக்க முயன்றனர். ஆனால், கணவன் மனைவி இடையே பிரச்னை பூதாகரமாக வெடித்தது. கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக நீடித்த பிரச்னை, காவல் நிலையத்துக்குச் சென்றது. கணவன் மீது மனைவி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதை அடுத்து, அந்தப் புகார் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு இருவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பினர்.
காவல் நிலையத்தின் குடும்ப நலப் பிரிவு இருவரையும் அழைத்து விசாரித்து, இருவருக்கும் மன மாற்றத்தை ஏற்படுத்த சமரச முயற்சியில் இறங்கியது. ஆனாலும் மனைவியின் கோபம் தீரவில்லை. அந்த நேரத்தில் தான், திடீரென நிகழ்ந்தது அந்த நிகழ்வு. வருத்தத்தில் இருந்த அந்தக் கணவன், தன் மனைவியைப் பார்த்து பிரபல இந்திப் பாடலைப் பாடத் தொடங்கினார்... அதுவும் சோகமாக! ``நா சீகா ஜினா தேரா பினா ...” என்று அவர் பாடத் தொடங்கியதும், மனைவிக்கும் மனம் மாறிவிட்டது. அந்தப் பாடலை மனம் உருகக் கேட்ட மனைவி அவர் தோளில் சாய்ந்தார். அதாவது, ‘உன்னை விட்டுப் பிரிந்து வாழ இன்னும் நான் கற்கவில்லை...’ என்று உருக்கமாகப் பாடக் கேட்ட மனைவி, மனம் உருகித் தன் கணவரை அணைத்துக் கொண்டார்.
காவல் நிலையத்தில் இப்படி பலர் சூழ்ந்திருக்க கணவன் மனைவி இருவரும் மனம் மாறி ஒன்று சேர்ந்ததை, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர் காவலர்கள். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவிட்டது.