
பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் இனி தங்களது ஆதார் எண்ணையும் கொடுத்தாக வேண்டும். இது உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமல்படுத்தப் படுகிறது. உ.பி. மாநில தேர்வுத் துறை இதனை அறிவித்துள்ளது. ஆதார் அட்டை இல்லை என்றால் தேர்வு எழுத அனுமதிக்கப் படமாடார்களாம்.
வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி உத்தரப் பிரதேச மத்யாமிக் சிக்ஷா பரிஷத் நடத்தும் உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
செவ்வாய்க்கிழமை வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட பள்ளி கண்காணிப்பாளர்களுடன் உரையாடினார் கூடுதல் தலைமைச் செயலர் சஞ்சய் அகர்வால். பள்ளி தேர்வுகளுக்கான மையங்கள் ஆன்லைன் மூலம் ஒதுக்குவது தொடர்பாகவும் பேசியுள்ளார் அவர்.
கூடுதல் தலைமைச் செயலரிடம் இருந்து அலகாபாத் மாவட்ட கல்வித் துறைக்கு வந்த கடிதத்தில், ஆதார் அட்டை கொண்டு வராத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப் படக் கூடாது. ஆதார் இல்லாமல் மாணவர்கள் யாரேனும் வந்தால், அதற்கு அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரே பொறுப்பு என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
முன்னதாக, உபி., மாநில பள்ளிக் கல்வித் தேர்வுகளின் பதிவுகளுக்கு ஆதார் கட்டாயம் என்று ஆக்கப்பட்டது. இருப்பினும், ஆதார் பெறப்படாத மாணவர்கள் மீது அது கட்டாயம் என்று வற்புறுத்தப் படவில்லை. மேலும், நேபாள நாட்டில் இருந்து தங்கியுள்ள மாணவர்களுக்கு ஆதார் தகவல்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
மாணவர்கள் போலியாக தங்களை தேர்வுக்கு இணைத்துக் கொள்வதில் இருந்தும், அதிக அளவில் முறைகேட்டில் ஈடுபடுவதில் இருந்தும் ஆதார் கட்டாய நடைமுறை தடுக்கும் என்று கூறப்பட்டது. இந்த வருடம் 37,12,508 மாணவர்கள் மேல் நிலைப் பள்ளி அளவிலும், 30,17,032 மாணவர்கள் உயர் நிலை அளவிலும் தேர்வு எழுதுகின்றனர்.
ஏற்கெனவே, நீட், ஜேஈஈ உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.