
தனது மொபைல் போனில் 'ரீல்' (Reel) வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தபோது, 50 அடி உயரப் பாலத்திலிருந்து தவறி விழுந்த 25 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மத்தியப் பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்தது.
ஜெய்ப்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில், சில்லி-சிலாரி மற்றும் நூர்நகர் கிராமங்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்தது.
காவல்துறையின் தகவல்படி, உயிரிழந்தவர் நூர்நகரைச் சேர்ந்த மதன் நூரியா என்று தெரியவந்துள்ளது. இவர் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
சூரியன் மறையும் நேரத்தில் பாலத்தின் மீது நின்றிருந்த நூரியா, தனது மொபைல் போனில் ரீல் வீடியோக்களைப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அப்போது, திடீரென நிலைதடுமாறி, 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்ததில் அவரது முதுகெலும்பு முறிந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த இளைஞரை உணவக ஊழியர்கள் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
விபத்து நடந்தபோது நூரியா ரீல் எடுத்துக்கொண்டிருந்தது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், நூரியாவின் மொபைல் போனில் அவர் கீழே விழுந்த காட்சி பதிவாகியுள்ளது.
புதன்கிழமை காலை பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு நூரியாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்ததி வருகின்றனர்.
ரீல்ஸ் மோகத்தால் ரைசன் மாவட்டத்தில் இந்த ஆண்டில் நடக்கும் மூன்றாவது மரணம் இதுவாகும். முன்னதாக, சலாமத்பூருக்கு அருகிலுள்ள ஹலாலி அணையில் ரீல் எடுத்துக்கொண்டிருந்த போபாலைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
அதேபோல், சேட்கஞ்ச் அருகே உள்ள மகாதேவ் நீர்வீழ்ச்சியில் ரீல் எடுத்தபோது பாறையில் வழுக்கி விழுந்த போபாலைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
சமூக ஊடகங்களில் லைக்குகளுக்காக ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருவதால், இத்தகைய விபரீத மரணங்கள் தொடர்ந்து நிகழ்வது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.