
இந்தியாவில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களில் 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) என்ற இணையப் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று (செவ்வாய்க்கிழமை) அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது அவர், "சஞ்சார் சாத்தி செயலியின் பயன்பாடு விருப்பத்தைப் பொறுத்ததுதான். பயனர்கள் தாங்கள் விரும்பினால் அதை நீக்கிக்கொள்ள முழு சுதந்திரம் உண்டு," என்று தெளிவுபடுத்தியிருந்தார்.
நவம்பர் 28 அன்று வெளியிடப்பட்டிருந்த முந்தைய உத்தரவில், இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களும் மற்றும் இறக்குமதியாளர்களும் இந்தச் செயலியைச் சாதனங்களில் 'முன்கூட்டியே நிறுவ வேண்டும்' என்று கட்டாயப்படுத்தப்பட்டது.
மேலும், உற்பத்தியாளர்கள் இந்த மாற்றங்களைச் செயல்படுத்த 90 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டது. மேலும், இது குறித்து அறிக்கையைச் சமர்ப்பிக்க 120 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
டிஜிட்டல் மோசடிகள், டிஜிட்டல் கைதுகள் மற்றும் திருடப்பட்ட அல்லது கள்ளச் சந்தையில் விற்கப்படும் போலி சாதனங்களின் விற்பனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 'சஞ்சார் சாத்தி' செயலியை கட்டாயமாக்க மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது.
இந்தச் செயலியின் முதன்மை நோக்கம், வாங்குவதற்கு முன், கைபேசியின் ஐ.எம்.இ.ஐ. (IMEI) எண்ணை வைத்து, அது உண்மையானதா என்பதைச் சரிபார்க்கக் குடிமக்களுக்கு உதவுவதே ஆகும். இந்தியா மிகப்பெரிய செகண்ட் ஹேண்ட் மொபைல் சந்தையைக் கொண்டிருப்பதால், திருடப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட சாதனங்கள் மீண்டும் விற்கப்படுவதைத் தடுப்பதே இதன் இலக்காகும்.
சஞ்சார் சாத்தி செயலியைப் பயனர்கள் நீக்கவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்று உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவு, தனியுரிமை மீறல் குறித்த கவலைகளை எழுப்பியது.
மூத்த காங்கிரஸ் தலைவரான சசி தரூர் உட்பட எதிர்க்கட்சியினர் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தனர். "மக்கள் உளவு பார்க்கப்படுகிறார்கள்" என்று குற்றம் சாட்டிய அவர்கள், இந்த செயலிக்கு "உளவு பார்க்கும் செயலி" (Snooping App) என்றும் பெயரிட்டனர்.
தற்போது, முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதால், தனியுரிமை குறித்த அரசியல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.