
மேற்கு வங்காள மாநிலம், அனந்தபூர் பகுதியில் 96வயதான பெற்றதாயை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு, அந்தமானுக்கு மகன் சுற்றுலா சென்ற கொடுமை நடந்துள்ளது. மகளின் உதவியால் அந்த மூதாட்டி மீட்கப்பட்டார்.
அந்தமான் சுற்றுலா
கொல்கத்தாவை அடுத்த அனந்தபூர் சவுபாகா பகுதியைச் சேர்ந்தவர் விகாஷ். இவரின் தாய்சபிதா நாத்(வயது96). சபிதா நாத்துக்கு விகாஷ் தவிர, 5 மகள்கள் உள்ளனர். இருந்தபோதிலும், இவர் மகன் வீட்டிலேயே வசித்துவந்தார்.
கடந்த புதன்கிழமை தனது 96 வயது தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு, அந்தமானுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலாவுக்கு விகாஷ் சென்றார்.
மீட்பு
வீட்டினுள் ஒரு சிறிய அறையில் கடந்த 4 நாட்களாக உணவின்றி, சபிதா நாத் அடைத்துவைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று சபிதாவின்மகள் ஜெயஸ்ரீ, தனது தாயைக் காண வீட்டுக்கு வந்தார்.
ஆனால், வீடு வெளியே பூட்டி இருந்தது. ஆனால், வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் உதவியோடு வீட்டுக்குள் நுழைந்தார்.
அங்கு உணவின்றி, சோர்ந்த நிலையில் இருந்த தனது தாய் சபிதாவைப் பார்த்ததும் மகள்ஜெயஸ்ரீ கதறி அழுதார்.
அப்போதுதான், கடந்த புதன்கிழமை இரவு, தனது தாயை வீட்டுக்குள் பூட்டிவிட்டு, விடுமுறையைக் கழிக்க பிகாஷ் அந்தமான் - நிக்கோபார் சென்று விட்டது தெரிய வந்தது.
சிறிய அறையில் பூட்டிவைப்பு
இது குறித்து சபிதா கூறியதாவது-
நான் கடந்த புதன்கிழமை நான் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தேன். அப்போது என் மகன் வீட்டுக் கதவை வெளியில் பூட்டிவிட்டுச் சாவியை வேலைக்காரியிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். ஒவ்வொரு நாள் காலையிலும் வேலைக்காரி வந்து எனக்கு உணவளித்துவிட்டு மீண்டும் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்று விடுவார். இந்த சிறிய அறைக்குள் இருந்தது எனக்கு மிகவும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. 2 முறை வாந்தி எடுத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, வீட்டில் இருந்து மீட்கப்பட்ட தனது தாயை ஜெயஸ்ரீ, தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.