
டில்லியில் ஏடிஎம் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதைப் பார்த்து மனம் குமுறி பிரதமர் மோடியை விமர்சித்தவருக்கு தர்ம அடி விழுந்ததில் அவரின் மண்டை உடைந்தது.
தெற்கு டில்லி ஜெய்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர் லல்லன் சிங் குஷ்வாகா (வயது 45). பெயிண்டர். இவர் டி.வி. வாங்குவதற்காக இஸ்மாயில்பூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் இருந்த ஒரு ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டு இருந்தனர். அந்தப் பகுதியே கூச்சல் குழப்பமாக காட்சி அளித்தது.
இதைப்பார்த்து மனம் குமுறிய குஷ்வாகா, ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையால் ஒட்டு மொத்த மக்களையும் மோடி சிரமத்துக்கு உள்ளாக்கி வருகிறார் என விமர்சித்தார்.
இதை அந்த ஏடிஎம்-மின் அருகே மளிகைக் கடை வைத்திருக்கும் ஆஸ்திக் கேட்டுக் குஷ்வாகாவை தன் கையில் இருந்த கிரிக்கெட் ஸ்டெம்பால் அவரது தலையில் தாக்கினார். இதில் குஷ்வாகாவின் மண்டை உடைந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர், குஷ்வாகாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து ஜெய்த்பூர் போலீஸ் நிலையத்தில் குஷ்வாகா கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்திக் மாயமாகி விட்டார்.