மும்பையில் சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியாவில் விமானப் பணிப்பெண்ணாக பயிற்சி பெற்று வந்த 25 வயது பெண் ஒருவர், அவருடைய வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த சம்பவத்தில் 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூபால் ஓக்ரே என்ற 25 வயது இளம் பெண், ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தனது சொந்த ஊரில் இருந்து மும்பை நகருக்கு பணிநிமிர்தமாக இடம் பெயர்ந்துள்ளார். அவர் தனது ஆண் நபர் மற்றும் சகோதரியுடன் அந்தேரி பகுதியில் வசித்து வந்தார்.
அந்தேரி பகுதியில் அவர்கள் மூவரும் வசித்து வரும் நிலையில், அந்த ஆண் நண்பர் மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரும் சில தினங்களுக்கு முன்பு தான் அவர்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது தான் வீட்டில் தனியாக இருந்த அந்த இளம் பெண், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டின் அறையில் இறந்து கிடந்தார்.
இந்நிலையில் ரூபால் கொலை தொடர்பாக, அந்த அப்பார்ட்மென்டில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் 40 வயது நபரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்மந்தமாக விசாரணை நடத்த 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், அதே அப்பார்ட்மென்டில் பணிப்பெண்ணாக பணிபுரியும் விக்ரம் அத்வாலின் மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்ட விக்ரம் அத்வால், அந்தேரி காவல் நிலைய கழிவறைக்குள் இரு கால்சட்டையைப் பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விக்ரம் அத்வால் மற்றும் ரூபல் ஓக்ரே ஆகியோர் இடையே அடிக்கடி சிறிய விஷயங்களில் தகராறு ஏற்படும் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்த அந்த விக்ரமிற்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வயது விமான பணிப்பெண்.. பூட்டிய அறையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த உடல் - இந்த கொடூரத்தை செய்தது யார்?