
ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மத்திய அரசை நான் கடுமையாக எதிர்த்ததால், சி.பி.ஐ. அமைப்பு மூலம் என்னை மோடி மிரட்டுகிறார் என்று மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவின் தெற்குப்பகுதியில் உள்ள ஹரிஸ் பார்க் பகுதியில் நீர் ஏற்றும் நிலையத்தை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது-
வாக்களித்திருக்கமாட்டார்கள்
பாரதிய ஜனதா தற்போது ஆட்சியில் இருந்து மாநிலத்தைக் கூட தக்கவைக்க முடியாது, நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அந்த கட்சிக்கு யாரும் வாக்களித்து இருக்கமாட்டர்கள். காங்கிரஸ் செய்த அதே தவறையும் பாரதிய ஜனதாவும் செய்கிறது. இது மீண்டும் நடக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சி தனது சொந்த தவறுகளால் ஆட்சியை இழந்து பலவீனமானது.
பணத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி அனைவரையும் மிரட்டுகிறது, அரசுகளை பணிய வைக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
சிதைத்துவிட்டது
மற்றவர்களை காயப்படுத்தும் முன், கட்சி அதனுடைய சொந்த பணிகளை முதலில் பார்க்க வேண்டும்.நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாரதிய ஜனதா கட்சி சிதைத்துவிட்டது. இத்தனை ஆண்டுகளாக இந்த நாடு சாதித்த பல விசயங்களை, ரூபாய் நோட்டு தடை என்ற ஒரு விசயத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டது.
மிரட்டல்
ரூபாய் நோட்டு விவகாரத்தில் நான் மத்திய அரசை கடுமையாக எதிர்த்தேன் என்பதற்காக என்னை சி.பி.ஐ. அமைப்பு மூலம் என்னை மோடி மிரட்டிப்பார்க்கிறார். எனக்கு எதிராக 1000 சி.பி.ஐ. அமைப்பை ஏவினாலும், நான் தொடர்ந்து மக்களுக்காக குரல்கொடுத்துக்கொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.